இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 12 (08.01.2025 )
சுவாமிமலையிலுள்ள `இன்டிகோ ஹோட்டல்`
என்ற இடத்திலேதான் நாம் முதல் நாள் இரவைக் களித்திருந்தோம். அரண்மனை அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஹோட்டல் உண்மையில் எமக்கு அரண்மனையொன்றில் வாழ்ந்தது போன்ற அனுபவத்தை வழங்கியிருந்தது.
அங்கு காணப்பட்ட சிவலிங்கம் , விக்கிரகங்கள் , கலைப்படைப்புகள் ,
புராதனமான பொருட்கள் , மற்றும் உபகரணங்கள் பண்டைய தமிழர் வாழ்வியலை எமக்குப் படம் பிடித்துக் காட்டின.
ஹோட்டல் வளாகத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் மற்றும் அவை பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்த விதம் போன்றவை ஆலயத்திலிருப்பதைப்போன்ற உணர்வையும்
இறைபக்தியையும் ஏற்படுத்தின.
இங்கு காணப்பட்ட இரண்டு பிள்ளையார்கள் அருகருகே
அமர்ந்திருப்பதைப்போன்ற சிலைகள் அபூர்வமானதாகக் காணப்பட்டன. இத்தகைய
சிலைகளை இதற்கு முன் நான் எனது வாழ்நாளில் வேறு எங்குமே கண்டதில்லை.
இரவு உணவுக்காக நாம் உணவு பரிமாறப்பட்டிருக்கும் மண்டபத்துக்குச் சென்றபோது அது
மேலைநாடுகளிலிருந்து வருகைதந்திருந்த உல்லாசப்பயணிகளால் நிறைந்திருந்தது.
பலதரப்பட்ட சுவைமிக்க உணவுகள் ” Buffe” முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து அவரவருக்கு விருப்பமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டோம்.
பால் அப்பத்துடன் இனிப்புச் சேர்த்த தேங்காய்ப்பாலும் சேர்த்து சுவைத்த மகிழ்ச்சியான
தருணங்களை வாழ்வில் என்றுமே என்னால் மறந்துவிட முடியாது.
இசை இரசிகர்களுக்காக ஹோட்டலின் ஒரு பகுதியில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. நவீன வசதிகள் கொண்ட அறைகள் , நீச்சல் தடாகம் என்பவற்றோடு பழமையும் புதுமையும் கலந்த ஒருவித கலவையாக அந்த ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பாகவும் குறிப்பிட்டுக் கூறும் விதத்திலும் இருந்தது.
இனிய அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுக்கொண்ட நிறைவோடு படுக்கைக்குச்
சென்றோம்.மறுநாள் பார்வையிடவுள்ள இடங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள்
இணைப்பாளர்களினால் பகிரப்பட்டிருந்தன. எனது இணையவழித்தேடலும் தொடர்ந்தது.
………………………….
”வேர்களைத் தேடி”பண்பாட்டுப் பயணத்தின் பதினோராவது நாள் , தமிழர் கலாசாரத்தையும் ,
இயற்கையின் அழகையும் ஒருங்கே இணைத்தது. நாளின் தொடக்கத்தில் , அரியலூரில் உள்ள
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.
யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியத் தளங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
இவ்வாலயம் சோழ மன்னர்களின் கட்டிடக்கலைச் சிறப்பினை வெளிப்படுத்துவதோடு
சோழப்பேரரசின் வரலாற்றுச் சிறப்பினையும் பறைசாற்றுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம்
இது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழப்பேரரசை
நிறுவிய முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு
250 ஆண்டுகள் பிற்கால சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது.
கிபி 1023 இல் கங்கை சமவெளியை வெற்றிகொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர
சோழனால் , கங்கைகொண்ட சோழபுரம் என்னும் நகரமும் கங்கைகொண்ட சோழீச்சரம் எனும்
சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டன.
இம்மூன்றும் கங்கை நதிக்கரையில் சோழர்களின் புலிக்கொடியை ஏற்றிய தமிழர்களுடைய
வீரத்தின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன.
இராஜேந்திர சோழன் தனது தலைநகரத்தை தஞ்சாவூரிலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட நகரமான
இங்கு மாற்றினான். அவனது காலத்திலிருந்து கிபி 1279 வரை ஆட்சிசெய்த சோழர் வம்சத்தின்
இறுதிவரை , சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இது இருந்தது.
இங்கு கட்டப்பட்ட பிரமாண்டமான கற்கோவில் அழகான சிற்பங்கள் நிறைந்த களஞ்சியமாகும். ( இந்த
நகரம் ஒட்டக்கூத்தரின் மூவர் உலா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஆகிய
இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.)
இன்றளவும் வாழும் வரலாறாக உள்ள இக்கற்கோவில் முதலாம் இராஜேந்திர சோழனின் காலம்
முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைகளின் அழகிய தொகுப்பாக உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து எடுத்துவந்த பல சிற்பங்கள் போர்
நினைவுப் பரிசாக இக்கோவிலிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு
வருகின்றன.. தற்போது இக்கோவில் இந்திய தொல்லியல் துறை , மற்றும் தமிழ்நாடு அரசின்
இந்துசமய அறநிலையத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.
கல்வெட்டுக்களிலிருந்தும் 1980களின் அகழ்வாராய்வுகளின்படியும் கோட்டைச்சுவர்கள் ,
அரண்மனைகள் , நடுவிலமைந்த கோயில் என கங்கைகொண்ட சோழபுரம் நன்கு திட்டமிட்டு
அமைக்கப்பட்ட நகரமாக இருந்தது தெரியவருகிறது.
முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட
சோழபுரத்தில் முடிசூடிக்கொண்டனர். இவ்வரசனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த முதலாம்
குலோத்துங்க சோழன் இந்நகரைச் சுற்றி கோட்டைச்சுவர்கள் கட்டினான்.
13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தங்களது முந்தைய தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாண்டியர்கள்
சோழர்களை முறியடித்து இந்நகரை அழித்தனர். கோயிலையும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளையும் தவிர இந்நகரின் அரண்மனைகள் உள்ளிட்ட பிற யாவும் அழிக்கப்பட்டன. 2004
இல் இவ்வாலயம் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
……………………….
இவ்வாலயத்துக்கு நாம் வருகைதந்தபோது எம்மை வரவேற்ற நிர்வாகத்தினர் பிஸ்கட்டுகள்
மற்றும் தேநீர் வழங்கி உபசரித்ததோடு ஆலயத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றனர்.
அங்கு நாம் எமது இணையவழித் தேடலில் தெரிந்துகொண்ட தகவல்களுக்கு மேலதிகமாகப்
பல விடயங்களைக் கண்டும் , கேட்டும் , இரசித்தும் மகிழ்ந்தோம்.
கங்கை கொண்ட சோழீச்சரம் ஆலயம் , தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் , தஞ்சைப்
பெருங்கோயில் ஆகியன சோழப்பெருமன்னர்களின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றுபவை.
இவ்வாலயங்கள் மூன்றையும் ஒருங்கே தரிசிக்கக் கிடைத்தது உண்மையில் எமக்குக் கிடைத்த
பெரும் பேறாகும்.
இக் கலைப்பொக்கிசங்கள் ஒவ்வொன்றையும் பார்வையிட்டு மீண்டபோது . எமது உள்ளங்கள்
அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட இவ் ஆலயங்கள்
…. அவற்றின் தனித்துவம் ….மற்றும் பெருமை என்பது தமிழகத்தில் வாழும் தமிழர்களால்
மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களால் போற்றப்படக்கூடியது….எண்ணியெண்ணிப் பெருமிதம் கொள்ளக்கூடியது…. இனிய அனுபவங்களைச் சுமந்து நெகிழ்ந்து நின்ற இதயங்களோடு கடலூரிலுள்ள வீராணம்
ஏரி நோக்கி எமது பயணம் நகர்ந்தது.
கடலூர் வீராணம் ஏரி
சோழ வம்சத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பாகக் கருதப்படும் வீராணம் ஏரி கடலூர்
மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோழ இளவரசனும் முதலாம் பராந்தகனின் முதல்குழந்தையுமான ராஜாதித்ய சோழன் இந்த ஏரியைக் கட்டினார்.
அவரது தந்தையின்நினைவாக இந்த ஏரிக்கு வீர நாராயணன் என்று பெயர் வழங்கப்பட்டது. ( முதலாம் பராந்தக
சோழனின் இயற்பெயர் வீரநாராயணன் ஆகும்.) காலப்போக்கில் மருவி வீராணம் என்று பெயர்
பெற்றது.
11 கிலோமீட்டர் நீளமும் 4 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இவ்ஏரி உலகின் மிக நீளமான
செயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 47.5 அடி ஆகும்.இது பத்தாம்
நூற்றாண்டில் பழங்கால மக்களால் கச்சா கை கருவிகளை மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்டது.
இவ் ஏரிக்கு காவிரியின் கொள்ளிடத்திலுள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வரும் நீர்
சேமித்து வைக்கப்படுகிறது.
இது 1465 முதல் 1500 மில்லியன் கனஅடிவரை சேமிப்புத்திறன் கொண்டது . ஆயினும் தற்போது
இதன் நீர்மட்டம் 323 மில்லியன் கன அடியாகக் குறைந்துள்ளது. சென்னைக்கு நீர் வழங்கும் நீர்த்
தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இவ் ஏரியைச் சுற்றி உலா வருவதும் கரையோரங்களில்
சுற்றுலா செல்வதும் மிகவும் அமைதியான புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாகும்.
( கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்னும் நாவல் இவ்வேரியின் கரையில் இருந்து
தொடங்குகிறது. இந்நாவலில் இவ்வேரி ”வீர நாராயண ஏரி ”என்றே குறிப்பிடப்பட்டுள்ளது .)
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட வீராணம் ஏரியைப் பார்வையிடுவதற்கு நாம்
வருகைதந்தபோது அங்கு பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளருடனான சந்திப்பு
இடம்பெற்றது. நிகழ்வின்போது தேநீர் உபசாரமும் இடம்பெற்றது.
நிறைவில் நாம் சிதம்பரத்திலுள்ள ”லக்சுமி விலாஸ்”எனும் ஹோட்டலுக்கு தங்குவதற்கு
அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு தமிழர்களின் பாரம்பரிய மதிய உணவு எமக்கு
வழங்கப்பட்டது.
மதிய உணவின் பின்னர் உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடான பிச்சாவரம்
காட்டினைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டோம்.
பிச்சாவரத்தின் அமைதியான இயற்கை அழகில் மயங்கி மெய்சிலித்து நின்றபோது தென்னிலங்கையில் களுத்துறை மாவட்டம் மாது கங்கை எனும் பிரதேசம் இத்தகைதொரு சதுப்புநிலக்காடு உள்ளமையும் அங்கு சென்று
குடும்பத்தினருடன் படகுச் சவாரி செய்தமையும் நினைவுக்கு வந்தது.



* இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் தளர்வடைந்த நிலையில் ஊரடங்கு முடக்கம்
நீக்கப்பட்டபோது எங்காவது வெளியில் சென்று வந்தால் என்ன? என்ற எண்ணம் பிறந்தது. அந்த
எண்ணத்தைச் செயலாக்க நாம் சென்றுவந்த இடம்தான் தென்னிலங்கை.
அங்கு மாதுகங்கை படகுச்சவாரியின்போது மீன்களை வளர்த்து அவற்றின் மூலமாக கால்களுக்கு ‘மசாஜ் ‘
வழங்கும் ஒரு இடத்துக்கு நாம் சென்றதும் அங்கு கால்களுக்கு ‘மசாஜ்‘ செய்ததும் மறக்க
முடியாத அனுபவங்கள். அந்த அனுபவங்களையும் மனம் இந்த நேரத்தில் அசைபோட்டு
மகிழ்கிறது.


பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு தொடர்பான பல்வேறு அரிய தகவல்களை நான் எனது
இணையவழித் தேடல் மூலம் அறிந்திருந்தேன். அதனை வாசகர்களிற்காக இங்கே தருகின்றேன்.
பிச்சாவரம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சதுப்பு நிலமானது கவர்ச்சியான
பறவைகள் மற்றும் வசீகரிக்கும் வனப்பகுதிகளின் அதிசயபூமியாகும். சுமார் 3000 ஏக்கர்
பரப்பளவில் உள்ள இந்த சதுப்பு நிலத்தில் இழுபடகு , படகுசவாரி போன்ற ஏராளமான நீர்
விளையாட்டுக்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.
ஆண்டுதோறும் பிச்சாவரம் சதுப்பு நிலத்திற்கு மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களில் வெளிநாட்டுப்
பறவைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. மேலும் பிச்சாவரம் அறிஞர் அண்ணா
சுற்றுலா வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு சவாரி நடத்தி வருகிறது.
இங்கு சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்தில் இருந்து முழு வனப்பகுதியையும் பார்க்கும்
வகையில் உயர் கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.
பிச்சாவரம் வனப்பகுதியினைப் பார்வையிட்டதோடு படகுச்சவாரியிலும் ஈடுபட்டு மனம் மகிழ்ந்த
நாம் , மாலைவேளையில் தங்கியிருந்த “லக்சுமி விலாஸ்” ஹோட்டலுக்குத் திரும்பினோம்.
அங்கு பங்கேற்பாளர்களான அண்ணாமார்களுடன் இணைந்து “கிரிக்கட் “விளையாடி மகிழ்ந்த
தருணங்களை இவ்வேளையில் நினைவு கூருகின்றேன்.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் , வீராணம் ஏரி மற்றும் பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகளும்
தமிழ்நாட்டின் கட்டிடக்கலை , வரலாற்றுச்சிறப்பு மற்றும் உயிரியல் வளங்களின் சிறப்புக்களை
வெளிப்படுத்தும் பாரம்பரியத் தளங்களாகத் திகழ்கின்றன.
இவற்றைத் தரிசித்துப் பெற்ற இனிய அனுபவங்களைச் சுமந்த நாம் மறுநாள் இந்தியாவின்
மிகப்பெரிய ‘ஷீ ஷெல்‘ அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட இனிய அனுபவங்களை எனது
அடுத்த பதிவில் தர உள்ளேன். அதுவரை காத்திருப்போமா ?
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -11