இளங்கோ பாரதியின் அழகிய அனுபவம் 11 (07.01. 2025)
”வேர்களைத்தேடி…” பண்பாட்டுப் பயணத்தின் பத்தாவது நாள் காலை நாம் தஞ்சாவூரிலுள்ள அரச ஆரம்பப்பாடசாலையொன்றில் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்க உள்ளோம்” என்ற தகவல் இணைப்பாளர்களினால் வழங்கப்பட்டதிலிருந்து உற்சாகத்தின் உச்சத்தில் மிதந்துகொணடிருந்தோம்.
நாம் பண்பாட்டுப் பயண நிகழ்வுகளில் அணிவதற்கென்று எடுத்து வந்திருந்த தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடையணிகளை அணிந்து மகிழ்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு அது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியையே தந்தது. புதிய அனுபவங்களைப் பெறுவதில் உண்டான விருப்பு… புதிய மனிதர்களின் அறிமுகத்தை விரும்பும் ஆர்வம் …எமது பண்பாட்டு விழுமியங்களை அறிந்துகொள்வதில் உண்டான தேடல் … அனைத்துமே எம்மை உந்தித்தள்ள உற்சாகத்துடன் தயாரானோம்.
பங்கேற்பாளர்கள் அனைவருமே தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடை அணிகளை
அணிந்து பொங்கல் விழாக்காணப் புறப்பட்ட காட்சி உண்மையில் கண்கொள்ளாக்காட்சியாகவே இருந்தது.
நாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் அளவு தூரத்திலேதான் பொங்கல்விழாக் கொண்டாட்டம் இடம்பெறவிருந்த அரச பாடசாலை அமைந்திருந்தது. ”அயலகத்தமிழர் பொங்கல் விழாக் கொண்டாட்டத்திற்கென” அப்பாடசாலை விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு எம்மை வரவேற்கவென பிரமுகர்கள் பலர் காத்திருந்தனர். வாசலில் வைத்து ஊர்ப்பிரமுகர்களால் சால்வை அணிவித்தும் மலர் கொடுத்தும் வரவேற்கப்பட்டோம்.

அது எம்மை மகிழ்ச்சிப்படுத்தியதென்றால் கலாசார ஆடைகளை அணிந்திருந்த அப் பாடசாலையின் மாணவர்கள் எம்மைப் பார்த்து மகிழ்ச்சிப் பெருக்கோடு எழுப்பிய உற்சாக ஒலி எம்மை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கே இட்டுச் சென்றது.

பாடசாலை மண்டபத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வுக்கு அதிதியாகக் கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ”திருமதி பிரியங்கா பங்கஜம்” அவர்கள் நிகழ்வைச் சிறப்பித்ததோடு பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி தஞ்சாவூரின் கலாசார மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் தமிழ்நாட்டின் பாரம்பரியம் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள் சாதாரண ஒரு பெண்மணிபோன்று மிகவும்
எளிமையாக ஆடையணிந்து அனைவருடனும் சகஜமாகவும் இனிமையாகவும் பழகியமை
பங்கேற்பாளர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
அதனைத்தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பொங்கல் திருவிழா நிகழ்வில் பங்கேற்பாளர்கள்
மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். பாடசாலை முன்றலில் இரண்டு பொங்கற் பானைகள்
வைக்கப்பட்டிருந்தன.அவற்றின் வாய்ப்பகுதி மஞ்சட்கிழங்கினால் சுற்றப்பட்டு
மெருகூட்டப்பட்டிருந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழகத்து மக்கள் எவ்வாறு
கொண்டாடி மகிழ்கின்றனர் என்பதைக் அயலகத்தமிழர் தெரிந்து கொள்ளும் வகையில்
பானையில் பாலைப் பொங்கவிடுதல் , பால் பொங்கும்போது குரவையிடுதல், அரிசிபோடுதல்,
பெண்கள் அதனைச் சுற்றிவந்து கும்மியடித்தல் போன்ற கலாசார நிகழ்வுகளும்
நிகழ்த்திக்காட்டப்பட்டன. இந்நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகுந்த
உற்சாகத்தோடு பங்கெடுத்தனர்.


பொங்கல்விழா நிகழ்வினைத்தொடர்ந்து பல்வேறுபட்ட கலைநுகழ்ச்சிகளும்
இடம்பெற்றன. மாணவிகளின் நடன நிகழ்வுகள்,மற்றும் பங்கேற்பாளர்கள் பங்குகொண்ட
வேடிக்கை நிகழ்ச்சிகள் அனைத்துமே பார்வையாளர்களிடையே மிகுந்த பாராட்டைப்
பெற்றிருந்தன.

விழா நிறைவில் அனைவருக்கும் வாழை இலையில் பொங்கல் பரிமாறப்பட்டது. பொங்கலோடு
வழங்கப்பட்ட கரும்பை முன்னர் எப்போதுமே கண்டிராத பங்கேற்பாளர்களில் சிலர் அதனை
எவ்வாறு உண்பது என்று தெரியாமல் தடுமாறியதும் அதனை எவ்வாறு உண்பது என்பது
தொடர்பாக அவர்களுக்கு உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டமையும் எம்வாழ்வில் என்றுமே
மறக்கமுடியாத தருணங்கள்.


பொங்கல் உண்ட தித்திப்பில், நிறைவான உள்ளங்களோடு அங்கிருந்து கும்பகோணம்
தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் தரிசனம் காண அழைத்துச் செல்லப்பட்டோம்.
கும்பகோணம் தாரசுரம் ஐராவதேசுவரர் கோவில்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஒரு
சிவன் ஆலயம் இதுவாகும்.இவ்வாலயம் இரண்டாம் இராசராச மன்னனால் 12ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்ட அழகிய கலைக்கூடமாகும். தேர் ஒன்று இழுத்துச்செல்வது போன்ற அமைப்பில்
இவ்வாலய மண்டபம் அமையப்பெற்றுள்ளது சிறப்பாகும்.

தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் , சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும்,
நாட்டிய முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிற்பங்களும் , புராணக் கதைகளை வெளிப்படுத்தும்
சிற்பங்களும் எனப் பல அரிய சிற்பக் கலைப்படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.

இசையை எழுப்பக்கூடிய படிக்கட்டுக்கள் இவ்வாலயத்தில் அமையப்பெற்றுள்ளமை வேறு
எங்குமே காண முடியாத அதிசயமாகும். இதனைப் பாதுகாக்கும் நோக்கில் தற்போது
இப்படிக்கட்டுக்கள் கம்பிவலையினால் ஆன கூடொன்றினால் மூடப்பெற்றுள்ளன.
ஆலயதரிசனம் காணச் செல்வோர் இதனைக் காணும் வாய்ப்பு உள்ளது.

வல்லுனர்களால் “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இத்தலம் முழுவதும் மிகவும்
நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும்
ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.

இக்கோவில் , கங்கை கொண்ட சோழீசுவரர் கோயில் , தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆகிய
மூன்றும் சேர்ந்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன.2004 இல்
இவ்வாலயங்கள் மூன்றும் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

இவ்வாலயத்தைத் தரிசிக்க அழைத்துச் செல்லப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைவருமே தமக்குக்
கிடைத்த இச்சந்தர்ப்பத்தையெண்ணி அகமகிழ்ந்திருப்பர் என அறுதியிட்டுக் கூறத்தக்க வகையில்
அனைவருமே நெகிழ்ந்துநின்ற தருணங்களை என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அவர்களில் ஒருவராக நானும் நெகிழ்ந்துபோய் நின்றேன் என்ற உண்மையை இங்கு உரத்துக்கூற
விரும்புகிறேன்.
எமது முன்னோர்களின் பண்பாடும் கலாசாரமும் வாழையடிவாழையாக தமிழகத்தைக் கடந்து
அயலகத்தமிழ் இளைஞர்களுக்குக் கடத்தும் ”வேர்களைத்தேடி”பண்பாட்டுப் பயண நிகழ்ச்சிக்கு
வித்திட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வாழ்த்தப்படவேண்டியவர்களே.

………………………………………………………
கும்பகோணம் கலைக்கூடமாகமிளிரும் ஆலயத்துக்கு மட்டுமன்றி பட்டு ஆடை நெசவிற்கும்
பெயர்போனதொன்றாக அமைந்துள்ளது. எனவேதான் இவ் ஆலய தரிசனம் கண்ட நாம்
வீடுகளில் பட்டுச்சேலை நெய்யப்படும் இடமொன்றுக்கும் அழைத்துச்செல்லப்பட்டோம்.

பட்டுச்சேலை தயாரிப்பு நுட்பங்களைப் பார்வையிட்டு அவைதொடர்பான அறிவை
விசாலப்படுத்தியவர்களாக பங்கேற்பாளர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டோம்.
எம்மில் சிலரது கரங்களில் அங்கு வாங்கிய பட்டுச்சேலைகளைச் சுமந்த பைகள்
கனத்துக்கொண்டிருந்தன.

அன்றையநாள் முழுவதும் ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியங்களைச் சுமந்த நாளாக எமக்கு
அமையப்போகின்றது என்று தெரியாதவர்களாக நாம் தங்குவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த” Indeco Hotels Swamimalai ” எனப்படும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அவ்விடத்தை நாம் சென்றடைய இரவு ஒன்பது
மணியாகியிருந்தது. காட்டுக்குள் அரண்மனையொன்று அமைந்திருப்பதைப் போன்ற அமைப்பில்
அவ் வாசஸ்தலம் அமையப்பெற்றிருந்தது.

இருளில் அவ்விடம் ஒரு பயத்தை ஏற்படுத்தியபோதும் உள்நுழைந்தபோது பயம் மெல்லமெல்ல
விலகிச் செல்ல கலைநயம் மிக்க பல அதிசயங்களைக் கண்டு நாம் வியந்து நின்றோம். அந்த
அதிசய அனுபவங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டாமா?




இருளில் கண்குளிரக் கண்டு மகிழக்கிடைக்காத அந்த அற்புத அனுபவங்களை பகலில் கண்டு
மகிழ்ந்த தருணங்களை எனது அடுத்த பதிவில்தர இருக்கிறேன். அதுவரை காத்திருப்போமா ?https://www.youtube.com/watch?v=-Qm3gZzaThA



















