சட்டத்தரணி ஒருவரை வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நாளை (03) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்திருந்தது.
இந்நிலையில் குறித்த அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்து தெரிவித்தாவது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக சட்டத்திரணி ஒருவருக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்தமை தொடர்பில் நாளை (03) ஆணைக்குழு அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பிக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், முறையான அதிகாரம் உள்ள நீதிமன்றம் மட்டுமே இதுபோன்ற உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, இந்த வழக்கைத் தீர்த்து வைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதன்படி, மனுவை தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதப் பிரதி வாதங்களை பரிசீலித்த பின்னரே, மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.














