அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்படும் 3 சகோதரிகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முறையே 9,8,5, வயதுகளையுடைய பேட்டினு ,எவலின் மற்றும் ஒலிவியா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சகோதரிகள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி வென்டாச்சியில் உள்ள தங்கள் வீட்டை விட்டு தங்களது தந்தையுடன் காரில் வெளியே சென்ற நிலையில் காணாமற் போயுள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த சிறுமிகளின் தாயார் தமது பிள்ளைகள் மற்றும் கணவரைக் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
இந்நிலையில் குறித்த முறைப்பாட்டினையடுத்து சிறுமிகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த சிறுமிகளை அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் இரத்தக்கறை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது தந்தையான ட்ராவிஸ் டெக்கர் (Travis Decker )தலைமறைவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் இராணுவ வீரரான ட்ராவிஸ் டெக்கர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



















