திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர்களது படகு கடலில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் (03) பதிவாகி இருந்தது.
திருகோணமலை திருக்கடலூர் பகுதியினை சேர்ந்த மூன்று மீனவர்கள் வாழைச்சேனை பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பாரிய மீன்பிடி படகினால் குறித்த மீனவர்கள் பயணித்த பாடகானது திட்டமிட்டு விபத்துக்கு உள்ளாக்கப்பட்டு சேதத்திற்குள்ளான நிலையில் குறித்த படகில் பயணித்த மூன்று மீன்வர்களும் மீட்கப்பட்டதுடன் சேதமடைந்த படகும் இன்று அதிகாலை(04) கரைக்கு கொண்டுவரப்பட்டது.
படகில் பயணித்த மூவரில் ஒருவர் கடலில் வைத்து தாக்கப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் படகில் பயணித்த ஏனைய இருவரும் குறித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03) மதியம் இடம்பெற்றிருப்பதாகவும் தொடர்ச்சியாக கடலில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவதுடன் கடற் தொழிலில் ஈடுபடும் தமக்கு பலவிதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாம் தொழிலினை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.