சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய பழம் பெரும் கட்சிகள் இப்பொழுது பெருமளவுக்குக் காலாவதியாகி விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்றன உடைந்துடைந்து அவற்றிலிருந்து உருவாகிய புதிய கட்சிகள்தான் இப்பொழுது அரங்கில் காணப்படுகின்றன. இதில் வலதுசாரிக் கட்சிகளும் அடங்கும். இடதுசாரிக் கட்சிகளும் அடங்கும். ஜேவிபி ஒரு இடதுசாரி கட்சியில்லை. எனினும் அவர்களும் தங்களை ஒரு பண்புரு மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்ட காரணத்தால்தான் இப்பொழுது ஆட்சியை அனுபவிக்க முடிகிறது. தனிய ஜேவிபியாக நின்று மக்களைக் கவர முடியாது என்பதனைக் கண்டு கொண்ட பின் அவர்கள் தங்களைத் தேசிய மக்கள் சக்தியாக தகவமைத்துக் கொண்டதன் விளைவுதான் இப்பொழுது அவர்கள் அனுபவிக்கும் ஆட்சி. எனவே தொகுத்துப் பார்த்தால் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் பழைய பாரம்பரிய கட்சிகள் பொலிவிழந்து போகக் காணலாம். புதிய கட்சிகள், புதிய சின்னங்கள் மேலெழுவதைக் காணலாம். ஆனால் தமிழ் அரசியலில்?
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பழமைப் பேணும் பண்புடையவர்களா என்று கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் தொடர்ந்தும் அரங்கில் நிற்கின்றன. வீடு, சைக்கிள் ஆகிய சின்னங்கள் தொடர்ந்து அரங்கில் நிற்கின்றன. ஓர் ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்கு பின்னரும் தமிழ் அரசியலில் மாறாத காட்சி அது. அப்படியென்றால் தமிழ் மக்கள் பழமை பேணிகளா? அல்லது தமிழ் மக்கள் மத்தியில் புதியதை உருவாக்கும் திறன் உடையவர்கள் குறிப்பாக ஆயுத மோதல் ஒன்றுக்கு பின்னரான ஒரு மிதவாத அரசியலை பண்புருமாற்ற அரசியலாக முன்னெடுக்கத் தக்கவர்கள் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் இல்லையா?
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின் நிகழும் புதிய அரசியல் நகர்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் கேட்க வேண்டியுள்ளது. தமிழரசுக் கட்சி அதே பழைய சின்னத்தோடு தனித்து நிற்கின்றது. தானே பிரதான கட்சி என்றும் வடக்கு கிழக்கு தழுவிய வெற்றிகளைப் பெற்ற கட்சி என்றும் அது நம்புகின்றது. தனக்குரிய முதன்மையை விட்டுக் கொடுத்து ஐக்கிய முயற்சிகளுக்குப் போக அது தயாரில்லை. இது ஒரு பக்கம்
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி தன்னை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று அழைத்துக் கொண்டாலும் அதே பழைய சின்னம்தான். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது காங்கிரஸ் புதிய அணிகளை உள்வாங்கி தமிழ்த் தேசியப் பேரவை என்ற பெயரில் போட்டியிட்டது. அப்பொழுதும் சைக்கிள் சின்னம்தான்.கடந்த வாரம் அவர்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒர் உடன்படிக்கையை எழுதியிருக்கிறார்கள். அந்த கூட்டுக்காவது சின்னம் மாறுமா?
சின்னத்தை மாற்றுவதென்றால் அல்லது புதிய கூட்டுக்கு ஒரு புதிய சின்னத்தை அறிமுகப்படுத்துவது என்றால் அதை ஒரு தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதற்கு புதிய கூட்டு உருகிப் பிணைந்த வெற்றிகரமான ஒரு கூட்டாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு யாப்பு வேண்டும். இல்லையென்றால் புதிய சின்னத்துக்குப் பொருள் இல்லை.கூட்டமைப்புக்குள் ஏற்படட அதே பிரச்சனைகள் இங்கேயும் வரும்.
அதுமட்டுமல்ல புதிய கூட்டு தமிழ் தேசிய அரசியலில் புதிதாக என்ன செய்யப் போகிறது? தேர்தல்களில் வெல்லப் போகின்றதா? அல்லது அதற்குமப்பால் மக்களைத் தேசமாக திரட்டும் மக்கள் இயக்கமாக கூர்படையப் போகின்றதா?
கஜேந்திரகுமார் என்னதான் கொள்கைக் கூட்டு என்று கூறினாலும் நடைமுறையில் இது கட்சிகளின் கூட்டுத்தான். தேர்தலில் இறங்கப் போகும் கட்சிகளின் கூட்டுத்தான். இப்பொழுதும் கொள்கை ரீதியாக உடன்பட்டால் தமிழரசுக் கட்சியோடு இணையத் தயார் என்று கஜேந்திரக்குமார் கூறுகிறார். இங்கு அவர் கொள்கை என்று கூறுவது இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்ற கொள்கை. ஆனால் அப்படி ஒரு இறுதித் தீர்வை நோக்கி உழைக்க புதிய அரசாங்கம் தயாரா?
இப்போதைக்கு இல்லை. ஆனால் தேர்தல்களில் தமிழ் மக்களின் ஆணையை வென்றால் சில சமயம் தாங்களே தமிழ்த் தரப்பு என்று கூறிக்கொண்டு ஒரு தீர்வைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க கூடும்.ஆயின், இப்போதைக்கு வராத ஒரு தீர்வு முயற்சியை நோக்கி மட்டும் ஐக்கியத்தை தீர்மானிக்கலாமா? தீர்வு முயற்சிகளை நோக்கி அதாவது யாப்பு உருவாக்க முயற்சிகளை நோக்கி ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவது சரியா? அல்லது தேர்தலை நோக்கி ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவது சரியா? இது ஒரு தீர்மானகரமான கேள்வி.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்படிப்பட்ட தீர்வைத் தரப் போகின்றது என்ற ஊகத்தில் அடிப்படையில்தான் இங்கு உரையாடல்கள் அதிகம் இடம்பெறுகின்றன. எனவே இப்போதைக்கு வராத; எப்படிப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியாத; ஒரு யாப்பு வரைபை நோக்கி ஐக்கியத்தை திட்டமிடுவதா? அல்லது உடனடிக்கு வரக்கூடிய தேர்தல்களில் மக்கள் ஆணையை வெல்வதா? ஒரு தேசமாகத் தமிழ் மக்களின் ஆணையை வெல்வது என்று திட்டமிட்டு ஐக்கியத்தை கட்டமைப்பதா? எது சரி?
இரண்டாவதுதான் சரி. கஜேந்திரகுமார் தான் உருவாக்குவது கொள்கைக் கூட்டு என்று சொன்னாலும் அது நடைமுறையில் தேர்தலை நோக்கிய கட்சிக் கூட்டுத்தான். அது மக்கள் இயக்கமாக மேலெழும்போதே அது கொள்கைக் கூட்டு என்ற முழு வளர்ச்சியைப் பெறும்.
ஆனால் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு கூட்டுக்கள் வேண்டும். கூட்டுக்கள்தான் தமிழ் மக்களின் நம்பிக்கைகளைப் புதுப்பிக்கும். கூட்டுக்கள்தான் தமிழ் மக்களை சோர்வில் இருந்து விடுவிக்கும். கூட்டுக்கள்தான் தமிழ் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை, கூட்டுணர்வை வளர்க்கும். எனவே கூட்டுக்கள் தேவை. அவை சமயோசிதக் கூட்டுக்களாகவும் இருக்கலாம். தந்திரோபாயக் கூட்டுக்களாகவும் இருக்கலாம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ்த் தேசியப் பேரவையின் எழுச்சி தேவையானது. அது உடனடியாக உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கு உதவும். புதிய கூட்டின் மூலம் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்குரிய கூடுதலான வாய்ப்புகளை அவர்கள் பெறலாம். அதனால் கிடைக்கும் உற்சாகத்தின் மூலம் மாகாண சபை தேர்தலை நோக்கி அவர்கள் கூட்டாக உழைக்கலாம்.
தமிழ் மக்கள் பேரவையில் ஏற்கனவே கூட்டாக உழைத்த கட்சிகள் அவை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பில் இரண்டு பட்டு நின்ற கட்சிகள் அவை. மீண்டும் ஒன்றாகியிருக்கின்றன. அதுதான் கட்சி மைய அரசியல். முதலில் ஒன்றாக நிற்கட்டும்.மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டட்டும். வாக்குகளைத் திரட்டட்டும். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளின் பின் தமிழ் மக்கள் பேரவை முழுமையற்ற வடிவத்தில் மறுபிறப்பு எடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம். இரண்டு மருத்துவர்கள் உட்பட விக்னேஸ்வரன் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்தால்தான் அது முழுமையான தமிழ் மக்கள் பேரவை.
ஐந்து ஆண்டுகளில் ஒரு தவறை திருத்திக் கொள்ள முன்னணி முன் வந்திருக்கிறது. மணிவண்ணனையும் இதற்குள் இணைத்துக் கொண்டால் முன்னணி தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை விதைக்கும். முன்னணிக்கும் மணிவண்ணனுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஏனைய எல்லாம் முரண்பாடுகளையும் விட ஆழமானவை. ஆனால் அரசியலில் நிரந்தரமான முரண்பாடுகள் என்று கிடையாது. நிலையான நலன்கள்தான் உண்டு. மான் கட்சிக்குள் மணிவண்ணனின் தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதில் முன்னணிக்கு சங்கடங்கள் இருக்கலாம். முன்பு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளை ஏற்றுக் கொள்வதிலும் அவர்களுக்கு அவ்வாறு சங்கடங்கள் இருந்தன. இப்பொழுது அந்தப் புனிதங்களை உடைத்துக் கொண்டு ஒரு கூட்டை உருவாக்க முடியும் என்றால் மணிவண்ணனோடு ஏன் உரையாடக்கூடாது?
மணிவண்ணன் இந்த கூட்டுக்குள் வருவாராக இருந்தால் அது தமிழ் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும்.புதிய கூட்டு மேலும் பலமடையும்போது அதைக் குறித்து உற்சாகமான எதிர்பார்ப்புகள் மேலெழும். தமிழரசுக் கட்சி அதன் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்.
உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளின்படி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நிதானமாக முடிவு எடுத்துத்தான் நடத்தும். அது தொடர்பான முடிவுகளை அவர்கள் எடுப்பதற்கு இடையில் தமிழ் மக்கள் ஒரு பெரிய திரளாக மேலெழ வேண்டும். புதிய கூட்டை உருவாக்கிய பின் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கும் பின்வரும் கருத்துக்கள் காலப் பொருத்தமானவை …“இந்த இணக்கம் நிரந்தர இணக்கமாக இருக்க வேண்டும். அதனை யாரும் மீறினாலும் அதனைத் தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்”














