லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (11) ஆரம்பமான 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை எதிர்த்துப் போராடியது.
ககிசோ ரபாடாவின் 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளுடன் 212 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுகளையும் பறிகொடுத்து அவுஸ்திரேலிய அணி, பின்னர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் பதில் தாக்குதல் தொடங்க முயற்சித்தது.
இதனால், போட்டியின் முதல் நாள் நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 43 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
இன்னும் ஆறு விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில் 169 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்க தலைவர் டெம்பா பவுமா நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சுக்கு சாதகமான மேகமூட்டமான சூழ்நிலையில் பந்துவீசத் தேர்வு செய்ததன் மூலம் போட்டி இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 03.00 மணியளவில் தொடங்கியது.
ரபாடா விரைவாக அவுஸ்திரேலியாவை 16-2 என்ற கணக்கில் சிக்கலில் ஆழ்த்தினார்.
உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் இருவரையும் ஒரே ஓவரில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.
கொக்கெய்ன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக ஒரு மாத தடைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய ரபாடா, நான்கு பந்துகளில் நான்கு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
30 வயதான வேகப்பந்து வீச்சாளர் இப்போது தனது பெயரில் 300க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை சேர்த்துள்ளார்.
டேவிட் வோர்னர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க வீரரான மார்னஸ் லாபுசாக்னே, 56 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்து மார்கோ ஜான்சனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதேநேரம், ஜான்சனின் பந்துவீச்சில் கைல் வெர்ரெய்னிடம் பிடிகொடுத்த டிராவிஸ் ஹெட் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
ஸ்டீவ் ஸ்மித்தும் பியூ வெப்ஸ்டரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 79 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் அவுஸ்திரேலிய இன்னிங்ஸை நிலைநிறுத்த உதவினார்கள்.
ஸ்மித் தனது அரைசதத்தை எட்டினார், ஆனால் இறுதியில் 66 ஓட்டங்களுக்கு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஐடன் மார்க்ராமின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதி நம்பிக்கையான பியூ வெப்ஸ்டரும் 72 ஓட்டங்களுடன் ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்கள் வெறும் 20 ஓட்டங்களுக்கு தங்கள் கடைசி ஐந்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால், அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் விரைவாகக் கலைந்தது.
தென்னாப்பிரிக்க சார்பில் பந்து வீச்சில் ரபாடா 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 49 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் அதிகபடியாக பெற்றனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்காவின் துடுப்பாட்டம் அவுஸ்திரேலியாவின் வேக தாக்குதலுக்கு எதிராக போராடியது.
ஸ்டார்க் மார்க்ராமை ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் வெளியேற்றினார், ரியான் ரிகெல்டனை 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார், இதனால் தென்னாப்பிரிக்கா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடிய வியான் முல்டர், ஸ்டார்க்கின் பந்தில் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி நேரடியான பிடியெடுப்பை தவறவிட்டதால், ஆரம்பத்திலேயே ஒரு வாய்ப்பிலிருந்து தப்பினார்.
இருப்பினும், முல்டர் 44 பந்துகளில் ஆறு ஓட்டங்களை மட்டுமே எடுத்து பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
இறுதியாக தென்னாப்பிரிக்கா முதல் நாள் போட்டி நிறைவில் 22 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆடுகளத்தில் பவுமா 3 ஓட்டங்களுடனும், டேவிட் பெடிங்ஹாம் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.
இந்தப் போட்டியின் நிலைமை, 2023 ஆம் ஆண்டு ஓவலில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் நிலையைப் பிரதிபலிக்கிறது.
அங்கு ஸ்மித் மற்றும் ஹெட்டின் சதங்கள் மூலம் ஆரம்பகால சிக்கலில் இருந்து மீண்டு போட்டியை வென்றது அவுஸ்திரேலியா.