10 ஆண்டுகளாக கட்டி வருவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன? மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை. பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது.10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம். எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? இவ்வாறு முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் ”ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய மந்திரி செகாவத். தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா? டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி”இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

















