ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டிருந்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததாக மூன்று அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
காமெனியை படுகொலை செய்வது “நல்ல யோசனையல்ல” என்று ட்ரம்ப் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறியதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
எனினும், இந்த அறிக்கை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வெள்ளிக்கிழமை (13) ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதிலிருந்து இந்த உரையாடல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் முதன்முதலில் வெள்ளிக்கிழமை ஈரானிய அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் பிற இலக்குகள் மீது தாக்குதலைத் தொடங்கியது.
அன்றிலிருந்து இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன, ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்கள் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் சூழ்நிலை குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் ட்ர்ப், “ஈரானும் இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும் “நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமாதானப்படுத்தியது போல” இருவரையும் பகைமையை நிறுத்தச் செய்வேன் என்றும் கூறினார்.
கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்கா இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிக்கும் என்றார்.
எனினும், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அந்நாட்டிடம் கேட்டாரா என்பதை கூற மறுத்துவிட்டார்.