12.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஆறு பயணிகள் இன்று (19) காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தின் கிரீன் வழித்தடம் வழியாக கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நான்கு ஆண்களும், இரு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அவர்களில் ஒரு பெண் வெளிநாட்டுப் பிரஜை ஆவார்.
சுங்கத்துறை தகவலின்படி, பயணிகள் துபாய், ஷார்ஜா மற்றும் பேங்கொக்கில் இருந்து வந்தவர்கள்.
அவர்கள் தங்கள் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 84,000 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 420 அட்டைப்பெட்டிகளை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள், சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சந்தேக நபர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.