இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (25) காலை ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட், இலங்கை கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அனுபவ வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் நீண்ட கால கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இலங்கை சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.
புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி நடைபெற்று வரும் நிலையில், தொடரின் தொடக்க ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் கொண்ட சமனிலையான போட்டிக்குப் பின்னர் தீர்க்கமான முடிவை எதிர்பார்க்கும் வகையில் இரு அணிகளும் இந்தப் போட்டியில் களமிறங்குகியுள்ளன.
இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மெத்தியூஸ் மற்றும் காயமடைந்த மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக துனித் வெல்லலகே மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம், உடல்நலக்குறைவு காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்காத மெஹிடி ஹசன் மிராஸ் திரும்பியதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு உற்சாகம் கிடைத்துள்ளது.
தொடக்க டெஸ்டில் இரு அணிகளும் சாதகமான துடுப்பாட்ட சூழ்நிலையில் ஓட்டங்களை குவித்தன.
நஜ்முல் ஹொசைன் சாண்டோ இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து வரலாறு படைத்தார்.
அதேநேரத்தில், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் பதும் நிஸ்ஸங்கா ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பங்களாதேஷின் பந்துவீச்சில் நயீம் ஹசனின் ஐந்து விக்கெட்டுகள் சிறப்பான பந்துவீச்சாக அமைந்தன.
அதே நேரத்தில் இலங்கையின் தரிந்து ரத்நாயக்க இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுகப் போட்டியில் கவனத்தை ஈர்த்தார்.
இந் நிலையில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சற்று முன்னர் வரை பங்களாதேஷ் 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு ஐந்து ஓட்டங்களை பெற்றுள்ளது.














