பேர்மிங்கமில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (02) காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இந்தியாவுக்கு வழங்கினார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது போட்டியின் முதல் நாள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 310 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணியின் தலைவர் ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் சதம் (114) அடித்தார்.
வலது கை துடுப்பாட்ட வீரரான அவர் 12 பவுண்டரிகள் அடங்கலாக 114 ஓட்டங்களுடன் உலகின் நம்பர் 1 டெஸ்ட் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன் (67 பந்துகளில் 41 ஓட்டங்கள்) ஆறாவது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவர்களைத் தவிர, தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 87 ஓட்டங்களையும், கருண் நாயர் 31 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்திருந்தனர்.
இங்கிலாந்து அணிக்காக, கிறிஸ் வோக்ஸ் இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் ஜோஷ் டோங், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் உள்ளூர் நேரப்படி காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகும்.