போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன் இவர்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி ‘இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ எனவும் வாதாடினார்.
நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ‘நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தார்.
அதேசமயம் பொலிஸாரின் தரப்பில் ‘இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார்.
இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து உத்தரவிட்டது.
அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் பிணை அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

















