ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (13) தெரிவித்தார்.
வொஷிங்டன் டிசிக்கு வெளியே உள்ள கூட்டுத் தளமான ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், உக்ரேனுக்கு எத்தனை அமைப்புகள் அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மொஸ்கோவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பு அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
ஆனால்,போரை முடிவுக்குக் கொண்டுவர அல்லது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள புட்டினை சமாதானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன.
இதனிடையே, உக்ரேன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ட்ரம்ப் திங்களன்று (14) நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவைச் சந்திக்க உள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்கத் தலைவர் NBC செய்திக்கு அளித்த செவ்வியின் போது, ரஷ்யா குறித்து “ஒரு முக்கிய அறிக்கையை” திங்களன்று வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.
ஆனால் அது தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கவில்லை.
பேட்ரியாட் உலகின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.
மேலும் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது.



















