இந்தோனேசியாவில் திங்கட்கிழமை (14) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து கிழக்கே சுமார் 3,000 கிமீ தொலைவில் மலுகு தீவுகளில், துவாலுக்கு மேற்கே 179 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக USGS தெரிவித்துள்ளது.
6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகவே கருதப்படுகிறது.
எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அதேநேரம், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
இந்தோனேசியா ‘நெருப்பு வளையத்தில்’ அமைந்துள்ளது.
இது தீவிர நில அதிர்வு நடவடிக்கைகளின் ஒரு வளைவாகும்.
அங்கு டெக்டோனிக் தாகடுகளின் நகர்வுகளினால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.
ஜனவரி 2023 இல், தனிம்பார் தீவுகளுக்கு அருகே 7.6 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது பல மணி நேரம் நீடித்த சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது.
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தது 15 வீடுகள் மற்றும் இரண்டு பாடசாலை கட்டிடங்கள் சேதமடைந்தன.
இருப்பினும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




















