கொழும்பு, பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 8 ஆம் திகதி பொரளை செர்பென்டைன் வீதியில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகள் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, பொரளை பொலிஸார் ஜூலை 16 ஆம் திகதி சஹஸ்புர பகுதியில் ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் இம்புல்கஸ்தெனியவைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார்.
இந்த கைதின் போது, முச்சக்கர வண்டியொன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொரளையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டாவது நபர் அன்று மாலை கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 11.115 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போலியான வாகன இலக்கத் தகடுகள், வாள், மொபைல் தொலைபேசிகள் மற்றும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் மற்றொரு முசக்கர வண்டி ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













