2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை மேல் நீதிமன்றம் இன்று (21) விடுதலை செய்தது.
மும்பையின் ரயில் வலையமைப்பை உலுக்கிய இந்த குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2015 ஆம் ஆண்டு இது குறித்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட மேற்கூறிய 12 நபர்களில் 05 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சம்பவம் நடந்து 19 ஆண்டுகளின் பின்னர் இந்த விடுதலை வந்துள்ளது.
நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிபதிகள் குழு, அரசு தரப்பு வழக்கில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட தீர்ப்பினை அறிவித்தது.
“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக நம்புவது கடினம். எனவே, அவர்களின் தண்டனை இரத்து செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
அதேநேரம், வேறு எந்த வழக்கிலும் அவர்கள் தொடர்புபடாது விட்டால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு கூறியது.
விசாரணையின் போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் குழு கூறியது.
குண்டுவெடிப்புகளில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கூட அரசுத் தரப்பு நிரூபிக்க முடியவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது.
2006 ஜூலை 11 அன்று, மும்பையில் தனித்தனி உள்ளூர் ரயில்களில் 11 நிமிடங்களுக்குள் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த குண்டுவெடிப்புகள் இந்தியாவின் மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


















