மான்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பமான இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 264 ஓட்டங்களை பெற்றிருந்தது.
ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியாவுக்காக சாய் சுதர்சன் 61 ஓட்டங்களை அதிகப்படியாக பெற்றார்.
போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி, பந்து வீசத் தீர்மானித்தது.
கிறிஸ் வோக்ஸ் அற்புதமாக பந்து வீசி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல்.ராகுவை 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க வைத்தார்.
அவரை அடுத்து லொர்ட்ஸ் மைதானத்தில் பிரகாசித்தது போலவே சிறப்பாக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட பென் ஸ்டோக்ஸ் சாய் சுதர்சன் மற்றும் இந்திய அணித் தலைவர சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இவர்களைத் தவிர லியாம் டாசன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர் மற்றும் அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்குப் பதிலாக இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, காயமடைந்த ஷோயப் பஷீருக்குப் பதிலாக லியாம் டாசனை அணியில் சேர்க்கப்பட்டார்.
இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

ரிஷப் பந்துக்கு காயம்
இங்கிலாந்து உடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட் முறையில் இந்திய விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த் வெளியேறினார்.
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு பின்னர் ரிஷப் பந்த் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து ஓட்டங்களை சேர்த்தனர்.
முதல் இன்னிங்ஸின் 68 ஆவது ஓவரை இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் வீசினார்.
அந்த ஓவரில் 4 ஆவது பந்தை ஸ்வீப் ஆட முயன்று பந்தை ரிஷப் பந்த் தவற விட்டார்.
அது அவரது வலது காலில் பட்டது.
இங்கிலாந்து அணி ரிவ்யூ செய்ததில் பந்து முதலில் துடுப்பாட மட்டையில் பட்டது தெரியவந்தது.
மறுபக்கம் ரிஷப் பந்த் வலியால் துடித்தார்.
அவரது வலது கால் பகுதி வீக்கம் அடைந்தது.
அதோடு அவரது பாதத்தில் இருந்து இரத்தம் வந்தது.
இதையடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் அவர் களத்தில் இருந்து வெளியேறினார்.
அவரால் நடக்க முடியாத காரணத்தால் வாகனம் மூலம் பெவிலியன் திரும்பினார்.
48 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் காயத்தால் அவர் வெளியேறினார்.
ரிஷப் பந்தை ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அவரை இந்திய அணியின் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.
லொர்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட போட்டியில் கை விரலில் பந்த் காயமடைந்தார்.
இப்போது காலில் காயமடைந்துள்ளார்.
















