மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பின் 17 ஆண்டுகளுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு குற்றவாளிகளையும் நீதிமன்றம் இன்று (31) விடுவித்தது.
வெறும் சந்தேகத்தால் வழக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்று கூறிய மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. லஹோட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
2008 செப்டம்பர் 29, அன்று கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மாலேகானில் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் வெடித்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
மேலும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புனித ரமழான் மாதத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.

இந்த வழக்கை முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்து.
பின்னர் 2011 இல் தேசிய புலனாய்வு நிறுவனத்தக்கு மாற்றியது.
இந்த குண்டுவெடிப்பு, முஸ்லிம்கள் இந்துக்கள் மீது முன்பு செய்த வன்முறைகளுக்கு பழிவாங்குவதற்காக அபினவ் பாரத் குழுவைச் சேர்ந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று ATS குற்றம் சாட்டியது.
இந்த சம்பவம் தொடர்பில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிரக்யா தாக்கூர், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் என்று ATS கூறியது.
அப்போது இராணுவ உளவுத்துறையில் பணியமர்த்தப்பட்ட இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் புரோஹித் வெடிபொருட்களை ஏற்பாடு செய்ய உதவியதாகவும், அபினவ் பாரத் உடனான சந்திப்புகளில் பங்கேற்றதாகவும் அது கூறியது.


















