35 ஆண்டுகளுக்கு முன்பு மண்டைதீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடல்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோரி, இன்று (04) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா உள்ளிட்டோர், வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இரண்டு தனித்தனி முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 மற்றும் 26 திகதிகளில் இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் காணாமல் போனதுடன் பலர் உயிரிழந்ததாக உறவுகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காணாமல் போனவர்களின் உடல்களில் 45 க்கும் மேற்பட்டவை மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு மற்றும் அருகிலுள்ள பாடசாலை கிணற்றில் புதைக்கப்பட்டுள்ளதாக வாழும் சாட்சியங்கள் உள்ளன.
இதனால், குறித்த கிணறுகளை அகழ்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய புதைகுழிகளை அகழ வேண்டும் என்ற பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














