அபுதாபியில் நேற்று (14) இரவு நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி தனது பரம எதிரியான பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசியக் கிண்ணத் தொடரை வெற்றிகாரமாக தொடங்கியது.
போட்டியில் பத்தும் நிஸ்ஸங்கவின் அரைசதம் மற்றும் கமில் மிஷாரவின் அற்புதமான துடுப்பாட்டம் என்பன 32 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியை பெற உதவியது.
அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்றிரவு 08.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது களத்தடுப்பினை மேற்கொள்வதற்கு தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பங்களாதேஷ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் டக்கவுட்டுடனும், ஒற்றை இலக்க ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேற, அணி சார்பில் அதிகபடியாக ஜாக்கர் அலி 41 ஓட்டங்களையும், ஷமிம் ஹொசைன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க அதிகபடியாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலகுவான ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 14.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபடியாக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க 34 பந்துகளில் 50 ஓட்டங்களையும், கமில் மிஷார 32 பந்துகளுக்கு 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கமில் மிஷார தெரிவானார்.
இந்த வெற்றியானது இலங்கைக்கு இரண்டு புள்ளிகளை பெற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், அணியின் நிகர ஓட்ட விகிதத்தையும் கணிசமாக உயர்த்தியது.
இது குழு B இல் அவர்களை வலுவான நிலைக்கு கொண்டு சேர்த்தது.
இலங்கை அணி தனது அடுத்த ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹெங்கொங் அணியை எதிர்கொள்ளும்.
இந்தப் போட்டியானது எதிர்வரும் திங்கட்கிழமை (15) டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 08.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















