நான் (வெற்றிவேலாயுதம், கலாமணிக்கம்) ஜதிஸ்குமார். அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து “கமு/சது/ சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் இடைநிலை கல்வியினையும் உயர்தரத்தினையும் கற்றுக்கொண்டேன். அப்போது துர.சுர்.சேல்வசிகாமணி ஆசிரியரிடமும், திரு.த.வாமதேவன் ஆசிரியரிடமும் சித்திரக்கலைக் கல்வியினைக் கற்று சுவாமி விபுலானந்த அலகியல் கற்கைகள் நிறுவகத்தில் கட்புலமும் தொழிநுட்பக் கலையும் பாடத்தில் இளம் நுண்கலைமானிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டேன். 2017ஆம் ஆண்டிலிருந்து வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைப் படைப்பாளர்களுடன் இணைந்து கண்காட்சிகளில் பங்குபற்றி வருகின்றேன்.
எனது ஓவியங்கள் உள்ளூரில் வாழ்கின்ற பெண்களுக்கு நுண் கடன் மூலமாக ஏற்படுகின்ற வன்முறைகளை வெளிப்படுத்துவதாகவும், அந்த வன்முறைகளில் இருந்து மீண்டெழ உள்ளூர் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளும் நிரந்தர உற்பத்தி தங்களது பொருளாதாரத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் அத்தியவசியமானது என்பதை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. நான் உள்ளூர் ஓவியனாக, உள்ளூர்ப் பெண்களின் பிரச்சினைகளை எனது காண்பியக் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்துவதனால் தற்போது உள்ளூரிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களையும், பாரம்பரிய பின்னல் முறைகளையும் எனது கலைப் படைப்பிற்காக பயன்படுத்துகின்றேன். இது கலை வெளிப்பாடு சார்ந்தும் கருத்தியல் சார்ந்தும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமானதாக அமையுமென நம்புகின்றேன்.
– வெற்றி ஜதிஸ்குமார்

மீண்டெழல்
பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதும் வன்முறைக்குட்படுத்தப் படுவதும் காலாகாலமாக நடந்துகொண்டே இருக்கின்றன. ஆதிக்கச் சமூகமும், ஆதிக்கச் சிந்தனையாளர்களும் அதற்கென பல உத்திகளைக் கையாள்கின்றனர். அவற்றில் ஒரு துளியே எனது கருத்தியல். நுண்கடன் எனும் ஒழுங்கு முறையற்ற திட்டத்தால் பெண்கள் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் மிக மோசமானவை. கடன் திட்டங்கள் ஒருவருடைய பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் சில கடன் திட்டங்கள் பெண்களின் பொருளாதார வாழ்வை சீர்குலைத்தது என்பதே உண்மை. நுண் கடன் எனும் வலையில் பெண்கள் விழக்காரணம் நிரந்தர உழைப்பின்றி மற்றொருவரை நம்பி. தங்கி வாழ்தலும் ஆகும்.
நுண் கடன் எனும் சதியிலிருந்து மீண்டெழல், நுண் கடனால் ஏற்பட்ட வன்முறைகளில் இருந்து மீண்டெழல், தங்கி வாழும், பிறரை நம்பி வாழும் எண்ணங்களில் இருந்து மீண்டெழல், முடங்கிக் கிடக்கும் பெண்கள் தங்களது பொருளாதாரத்தில் வேர் ஊன்றி நிற்கவும் மற்றொருவரின் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக வாழவும் மீண்டெழல் அவசியமாகின்றது.

நுண் கடன் (Micro Loans)
“இஞ்சி கொடுத்து மிளகு வாங்கியது போல’’ எனச் சொல்லப்படும் அரசியல் ரீதியாக நம் நாட்டவர்க்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை நாம் அறிந்திருக்கின்றோம். அதை விடப் பெரிய ஏமாற்றமும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் எனும் பெயரில் அவர்களுக்கு நிதிகளை வழங்கி அந்த நிதிகளைக்கொண்டு தொழிலைத் தொடங்க முன் கிழமைக்கு ஒரு முறை நிதியை அறவிடுவதும் அதிக வட்டி வசூலிப்பதும் செலுத்தத்தவறும் பட்சத்தில் கடன் பெற்ற பெண்களை உடல், உள ரீதியாக வன்முறைக்குட்படுத்துவதும், பெண்களின் உழைப்பை உறிஞ்சுவதும,; ஏமாற்றுவதும் என்பது இஞ்சி கொடுத்து மிளகு வாங்கியதை விட கொடுமையானது.
இங்கு பெண்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென பெற்றுக்கொண்ட நுண் கடன்கள் அவர்களது பொருளாதாரம் இருந்ததை விட மிக மோசமாகப் பாதிக்கப்படுவதற்கும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதற்கும் உயிரைத் துறப்பதற்கும் காரணமாகிவிடுகிறது. நம் நாட்டவர்கள் நம் நாட்டு மக்களை நுண்கடன் எனும் திட்டத்தின் மூலம் ஏமாற்றி தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்கின்றனர். கடன் பெற்ற பெண்கள் இருந்த சுமையுடன் இன்னும் கடன் சுமையை சுமப்பது இஞ்சி கொடுத்து மிளகு வேண்டியதை விட மிளகாய் வேண்டுவதற்கு சமமானது.

அடையாளம் – I,II, III
நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தொழிலைச் செய்கின்றோம். அந்தத் தொழில்களில் அதிக அதிகாரமுடையது, குறைந்த அதிகாரமுடையது, அதிக ஊதியம் கிடைப்பது, குறைந்த ஊதியம் கிடைப்பது என பல வகைகளைச் சேர்ந்த தொழில் ஈடுபடுவோர் காணப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட தொழில் நிலைக்கு ஏற்ப ஒவ்வொருவருடைய அதிகாரமும், சிந்தனையும், செயற்பாடும் வேறுபடும். அந்த அதிகார நிலையில் இருப்பவர்கள் மற்றவர்களை அடக்கி ஆழ்பவர்களாக, வன்முறைக்குட்படுத்துபவர்களாக அல்லாமல் அனைவரையும் நேசிக்கின்ற சமத்துவத்தைப் பேணுகின்றவர்களாக இருத்தல் வேண்டும். இந்த நல்ல சிந்தனையை எங்கள் அடையாளமாகக் கொள்வோம்
வளங்கள்
உள்ளூர் உற்பத்திகளுக்கு மிக முக்கியமானது உள்ளூர் வளங்கள். அவற்றைக் கொண்டே உள்ளூர் உற்பத்திகளை மேற்கொள்ள முடியும். ஆதியிலிருந்தே எங்களது முன்னோர்கள் அவ் உற்பத்திகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். உள்;ளுர் வளங்களைக் கொண்டு உற்பத்திகளை மேற்கொள்ளுவதில் பெண்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. எங்கள் பிரதேசத்தில் அவ்வுற்பத்தியாளர்களுக்கு சரியான அங்கிகாரம் கிடைப்பதில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உள்ளூர் உற்பத்திகள் மிக முக்கியமானவை. இறக்குமதிகளை நம்பி அவற்றைப் பயன்படுத்துவதில் பெருமைகொண்ட நாங்கள் கடந்த கால பொருளாதார நிலையால் இறக்குமதிகள் தடைப்பட்ட போது இறக்குமதிப் பொருட்கள் கிடைக்காமல் அவற்றை அதிக விலைக்குச் சிலர் விற்பனை செய்ததும் நாம் வாங்கியதும் சிறந்த பாடத்தைக் கற்றுத் தந்தது. உள்ளூர் உற்பத்திகளே எப்போதும் எங்களுக்கு குறைவின்றிக் கிடைக்கக்கூடியவை. அவற்றை மேற்கொண்டு வருகின்ற பெண்களும் எங்களது மிக முக்கியமான வளங்கள். உள்ளூர் உற்பத்திகளையும் அவ்வுற்பத்திகளை மேற்கொள்ளுகின்ற பெண்களையும் மதிப்போம்.

அபிவிருத்தி
இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடையக் காரணம் முறையான திட்டமிடல் இன்றிய பொருளாதாரக் கொள்கைகளும், செயற்பாடுகளுமாகும். மக்களின் பணத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி குறுகிய காலப் பயன்பாட்டு நோக்கம் இல்லாது எதிர்கால சமூகத்தின் பயன்பாட்டிற்கும் நீடித்து நிலைத்திருக்கக் கூடியதாகவும் அமைதல் வேண்டும். மக்களுக்குப் பயன்படாத திட்டங்களும் அவர்களின் அனுமதியின்றி மக்களைக் கடனாளியாக்கும் கடன் சுமைகளும் நாட்டின் பொருயாதாரத்தை மேலும் சீர்குலையச் செய்யும். மக்களின் பயன்பாட்டிற்கு உதவாத அவர்களை கடனாளியாக்குகின்ற கொள்கைகளும் திட்டங்களும் நாட்டின் மக்கள் மீது மறைமுகமாக நிகழ்த்தப்படும் வன்முறைகளாகும்.
சூழ்ச்சி
கடன் எனும் முடிச்க்குள் சிக்கவைத்து அதிலிருந்து பெண்களின் உழைப்பை உறிஞ்சி தங்களை உயர்திக் கொள்ள பெண்களைச் சுற்றி பல சூழ்ச்சிகள் இடம்பெருகின்றன. சில முதலாளித்துவ சிந்தனையாளர்கள் நுண் கடன் எனும் திட்டத்தை மிகப் பெரும் வணிகமாக மேற்கொண்டு வருகின்றனர். எங்களைச் சுற்றி நிகழ்த்தப்படுகின்ற சூழ்ச்சிகளை மதியால் வெற்றிகொள்வோம்.

சுரண்டல்
பெண்களின் பொரளாதார வாழ்வை மேம்படுத்த அவர்களுக்கு தொழில் வழங்குவது மிச்சிறந்த சேவையாகும். அதே போல் பெண்களின் உழைப்பிற்கு தகுந்த ஊதியத்தை வழங்குவதும் நற் பண்புகளில் ஒன்று. முதலாளித்துவ சிந்தனையாளர்கள் பெண்களின் உடலுழைப்பை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமது சுகபோக வாழ்கையை வாழ்கின்றனர். இன்னும் சிலர் பெண்களின் உழைப்பை நேரடியாகவும், மறைமுகமாவும் சுரண்டுகின்றனர். இச் செயற்பாடு நீண்ட காலமாக நமது சமூகத்திலும், வெளிச் சமூகத்திலும் (மலையகம்) தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
COVID-19
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலானோரின் வாழ்வியல் பாதிக்கப்பட்டது. குறிப்பாக உள்;ளுர்; உற்பத்தியாளர்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. கொரோனாப் பரவலைத் தடுக்க அரசாங்கம் வான்வழி, கடல்வழி, உள்ளுர்ப் போக்குவரத்து அனைத்தையும் தடைசெய்து ஊரடங்கு உத்தரவைப் பிரப்பித்தது. இதன் காரணமாக அன்னியச் செலாவணி குறைவடைந்து இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டு இறக்குமதிப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதியைக் குறைத்து ,றக்குமதியை நம்பியிருந்த எமக்கு பொருளாதாரம் சிறந்த பாடத்தைக் கற்றுத்தந்தது.
– வெற்றி ஜதிஸ்குமார்



















