பாஹிசன் ரவீந்திரன் (Bahison Ravindran), தான் எப்போதும் இந்தியர் என்று நம்புவதாகக் கூறுகிறார்.
தென்னிந்திய தமிழ்நாட்டில் இலங்கை அகதி பெற்றோருக்குப் பிறந்த 34 வயதான வலைத்தள மேம்பாட்டாளர் (web developer), அங்கு படித்து வேலை செய்தார்.
மேலும், இந்திய கடவுச்சீட்டு உட்பட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல அடையாள ஆவணங்களையும் வைத்திருந்தார்.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அவரது கடவுச்சீட்டு செல்லாது என்று கூறி இந்திய பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
அவரது பெற்றோர் இருவரும் 1990 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது இந்தியாவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் என்பதால் அவர் “பிறப்பால் இந்திய குடிமகன்” அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்ட காலமாக, இந்தியாவில் பிறந்த எவரும் இந்திய குடியுரிமையைப் பெறத் தகுதி பெற்றிருந்தனர்.
ஆனால் 1987 ஆம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி, அந்த ஆண்டு ஜூலை 1 ஆம் திகதிக்குப் பின்னர் பிறக்கும் குழந்தை தகுதி பெற குறைந்தபட்சம் பொற்றோரில் ஒருவராவது இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
தனது பெற்றோர் இந்தியாவுக்கு வந்த சில மாதங்களுக்குள் 1991 இல் பிறந்த ரவீந்திரன், கடந்த வாரம் சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்த விடயம் பற்றி தனக்குத் தெரியாது என்றும், தனது வம்சாவளியை அதிகாரிகளிடமிருந்து ஒருபோதும் மறைக்கவில்லை என்றும் கூறினார்.
“பிறப்பால் குடியுரிமை” இந்தியாவில் தானாகவே கிடைக்காது என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், உடனடியாக முறையான குடியுரிமை தகுதியை பெறுவதற்கு விண்ணப்பித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், இப்போதைக்கு, அவர் “நாடற்றவராக” மாறிவிட்டார்.
அவரது தனித்துவமான சூழ்நிலை, 1980 களில் பல தசாப்தங்களாக நீடித்த மோதலின் போது தீவு தேசத்தை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அவர்களில் 90,000க்கும் மேற்பட்டோர் இந்தியாவின் தென் மாநிலத்திலுள்ள அகதி முகாம்களிலும், வெளியிலும் வாழ்கின்றனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வரலாற்று உறவுகள், மொழியியல் மற்றும் கலாச்சார ஒற்றுமைகள் மற்றும் இலங்கையுடனான புவியியல் அருகாமை காரணமாக பலர் இந்த மாநிலத்தை ஒரு அடைக்கலமாக தேர்ந்தெடுத்தனர்.
மேலும், 1987க்குப் பின்னர், இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்த ரவீந்திரன் போன்ற 22,000க்கும் மேற்பட்ட நபர்கள் இப்போது உள்ளனர்.
ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், அவர்களின் குடியுரிமை நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
1951 ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் மாநாட்டிலோ அல்லது அதன் 1967 ஆம் ஆண்டு நெறிமுறையிலோ இந்தியா கையெழுத்திடவில்லை என்பதும், இலங்கை அகதிகளை சட்டவிரோத குடியேறிகளாகக் கருதுவதும் ஒரு காரணம்.
இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரின் விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கும் 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), இலங்கையைச் சேர்ந்த தமிழர்களையும் விலக்குகிறது.
இலங்கைத் தமிழர்களின் நிலை மாநிலத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான விடயமாகும்.
பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதாக உறுதியளிக்கின்றன.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, அது ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது.
2022 ஆம் ஆண்டுதான் இந்தியா முதல் இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்கியது.
1987 ஆம் ஆண்டு சட்டத்திற்கு ஒரு வருடம் முன்பு கே. நளினி பிறந்தார், அந்தச் சட்டம் குறைந்தபட்சம் ஒரு பெற்றோருக்கு இந்திய குடியுரிமையை கட்டாயமாக்கியது.
அதன் பின்னர் குறைந்தது 13 இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தனது வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று ரவீந்திரன் நம்புகிறார்.
அவர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.
மேலும் அவர் ஒருபோதும் இலங்கைக்குத் திரும்பப் போவதில்லை என்றும் கூறுகிறார்.
அவர் அண்மையில் பிபிசி செய்திச் சேவையிடம், தனது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே இலங்கைக்குப் பயணம் செய்ததாகக் கூறினார் – செப்டம்பர் 2024 இல் ஒரு இலங்கைப் பெண்ணை மணக்க.
இந்த ஆண்டு தனது மனைவியின் பெயரைச் சேர்க்க புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த பின்னர் தனது பிரச்சினைகள் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.
நீதிமன்றத்தில் ரவீந்திரனின் சார்பாக வாதாடும் சட்டத்தரணி சந்தேஷ் சரவணன் பிபிசியிடம், அவரது இலங்கை பெற்றோர் குறித்து பொலிஸாரால் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவருக்கு புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால், இந்தியாவில் வெளிநாட்டினரைப் பதிவு செய்வதை மேற்பார்வையிடும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO), பின்னர் அவரது பெற்றோரின் பூர்வீகத்தை பொலிஸாரிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மோசடி மற்றும் சட்டவிரோதமாக இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ரவீந்திரன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், கடந்த வாரம் அவர் சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார்.
ஒக்டோபர் 8 ஆம் திகதி அடுத்த விசாரணை இடம்பெறவுள்ளது.
“இத்தனை ஆண்டுகளில், நான் இந்தியன் இல்லை என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை,” என்று ரவீந்திரன் பிபிசியிடம் கூறினார்.
“நான் ஒரு ‘நாடற்ற நபர்’ என்று முதல் முறையாக என்னிடம் கூறப்பட்டபோது, அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” – என்றார்
இப்போது, ரவீந்திரன் நீதிமன்றம் தன்னுடன் உடன்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.















