நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதில் உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மாணவர்களிடையேயான மனா அழுத்தம் குறித்து மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
இன்றைய (10) உலக மனநல தினத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணம் என ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதையும் குறித்த ஆய்வு எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச மன நல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச மனநல தினம் 1992 இல் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்த நாள் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன நலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதேவேளை சர்வதேச மன நல தினத்தையொட்டி இலங்கையின் பல பகுதிகளிலும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் நடைபவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனி நடைபெற்றது.
இத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பிலும் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் தி.ரவி, மனநல வைத்திய நிபுணர் கமல்ராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து மனநலத்தின் அவசியத்தினை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இலங்கையில் தற்கொலைகள் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.














