கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியானது மழையால் இரத்து செய்யப்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை எடுத்து, நியூஸிலாந்துக்கு சவாலான இலக்கினை நிர்ணயித்தது.
இந்த இலக்கினை நிர்ணயிப்பதற்கு நிலக்ஷிகா சில்வாவின் அபாரமான அரைசதம் முக்கிய காரணம்.
இலங்கையின் வலுவான தொடக்கம் மற்றும் நடுத்தர ஓவர்களில் சில தடங்கல்களுக்குப் பின்னர், அவரது தாமதமான அதிரடி ஆட்டம் அணியை போட்டித்தன்மை வாய்ந்த ஓட்டத்தை எட்ட வைத்தது.
இன்னிங்ஸில் அவர் 28 பந்துகளில் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
அத்துடன், நடந்து வரும் உலக்க கிண்ணத்தில் வேகமாக (26 பந்துகள்) அரைசதம் பெற்றார்.
இவர் தவிர இலங்கை அணித் தலைவர் சாமரி அத்தபத்து 72 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை, அணித் தலைவர் சோஃபி டெவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதே நேரத்தில் ப்ரீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
இலங்கையின் இன்னிங்ஸுக்குப் பின்னர் மழை பெய்ததால் நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டமானது பாதிக்கப்பட்டது.
மழை இடைவிடாது பெய்தமையில் இறுதியில் அதிகாரிகள் ஆட்டத்தை இரத்து செய்ய முடிவு செய்தனர்.
இதனால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.
இந்த முடிவினால் இலங்கை அணி நான்கு போட்டிகளில் இருந்து இரண்டு புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம், நியூஸிலாந்து அணி 5 ஆவது இடத்தில் உள்ளது.
















