மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்திருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த உறவினர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு தலைமையகத்திற்கு அருகில் உள்ள வங்கியின் கிளையொன்றுக்கு முன்பாகயிருந்த துவிச்சக்கர வண்டியொன்றினை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சின்னஉப்போடையினை சேர்ந்த 22வயது இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவரிடம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டதுடன் இவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான வாக்குமூலம் பெறுவதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியிருந்ததாகவும் இதன்காரணமாகவே இளைஞன் நோய்தாக்கத்தி;றகுள்ளானதாகவும் தெரிவித்து உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் நடாத்தினார்கள்.
குறித்த இளைஞனின் மரண விசாரணை அறிக்கை கிடைக்கவில்லையெனவும் அது தொடர்பான அறிக்கைகிடைக்கப்பெற்றதும் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வீதியை மறித்து உறவினர்கள் போராட்டம் நடாத்தியதுடன் போக்குவரத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தனது மகன் சைக்கிளை எடுத்துச்சென்றது தொடர்பில் தகவல் கிடைத்ததும் உறவினர்களினால் அதனை மீளகொண்டு ஒப்படைத்தபோதிலும் தனது மகனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கைதுசெய்துள்ளதாகவும் தனது மகனை பொலிஸார் தாக்கியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் இருந்ததாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த இளைஞனின் உறவினர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அங்குவந்த பொலிஸார் வீதியில் நின்றவர்களை வீதிக்கு அருகில் அழைத்துச்சென்று அவர்களுடன் நிலைமையினை தெளிவுபடுத்தினர்.
இதன்போது சம்பவ இடத்திற்குவந்த மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.லீலாரத்தன அங்குவந்து கலந்துரையாடி இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
தமது பிள்ளை வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம்வரும்போது நல்ல நிலையிலேயே இருந்ததாகவும் இது தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்தார்.












