சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று இடம்பெற்றது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்திலும் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்று தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















