பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 2025.12.10 ஆம் திகதி கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்தனர்.

தித்வா சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில், கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன், இலங்கை மக்களுடனான தனது ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இந்த அவசர நிலைமையில், தனது ஆதரவையும் உதவியையும் அவர் இங்கு வெளிப்படுத்தியதுடன், காலநிலை மீள்தன்மை மற்றும் நிலைபேறான தன்மை பற்றி கவனம் செலுத்தும் எதிர்காலத்தின் தேவையை ஏற்றுக்கொள்ளும் வகையில் காலநிலை மாற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடினர்.
பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஸீஸ், பிரதி உயர்ஸ்தானிகர் ஸுனைரா லத்தீப், பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தொழில்வாண்மையாளர்கள் மற்றும் கல்விமான்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களுக்குப் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் அமையப்பெற்றுள்ள குழு முறைமை குறித்தும் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்கள் வினவினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், வலுவான குழு முறைமை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்கள் விளக்கமளித்தார்.
அதன் பின்னர், பாகிஸ்தானின் கடல்சார் அலுவல்களுக்கான பெடரல் அமைச்சர் கௌரவ முஹம்மத் ஜுனைத் அன்வர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற வளாகத்தையும் பார்வையிட்டனர்.

















