மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்தது.
லக்சபான தேயிலை தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேயிலை தொழிற்சாலையை முழுமையாக மீள்புனரமைத்து, வழமைபோல் தேயிலைத் தூள் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இந்த தீ விபத்து தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் அன்றைய தினமே நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டு, குறித்த தேயிலை தொழிற்சாலையை மிக விரைவாக மீள்புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
லக்சபான, வாழமலை, எமில்டன், முள்ளுகாமம் மே.பி, முள்ளுகாமம் கீ.பி ஆகிய ஐந்து தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 772 தொழிலாளர்கள் தினசரி பறிக்கும் தேயிலை கொழுந்துகள், 75 தொழிற்சாலை தொழிலாளர்களால் லக்சபான தேயிலை தொழிற்சாலையிலேயே தேயிலைத் தூளாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்தினால் தற்காலிகமாக செயலிழந்திருந்த லக்சபான தேயிலை தொழிற்சாலை, தற்போது புதிய மாற்றங்களுடன் மீள்புனரமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் லக்சபான தேயிலை தொழிற்சாலைக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு, தீ விபத்து தொடர்பாகவும், தற்போது இடம்பெற்று வரும் மீள்புனரமைப்பு பணிகள் குறித்தும் லக்சபான தோட்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத் அவர்களுடன் கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.
இதன் போது, தீ விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேயிலை தொழிற்சாலையை முழுமையாக மீள்புனரமைத்து, வழமைபோல் தேயிலைத் தூள் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், குறித்த தேயிலை தொழிற்சாலை தொடர்பாக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துடன் தாம் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான தேவையான உதவிகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.



















