இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பான ஒப்புதலுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் குழு நாளை கூடவுள்ளது
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பான ஒப்புதலுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் குழு நாளை கூடவுள்ளது.
இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக இலங்கைக்கு 347 மில்லியன் டொலர் நிதிஉதவி கிடைக்கப்பெறவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 5 ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர்,கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதந்திருந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.
பெரும்போகப் பொருளாதார அபிவிருத்திகள், பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை அமுல்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
அதனையடுத்து விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.
சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்துக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைக் கருத்திற்கொண்டே அதற்கு பணிப்பாளர் சபையின் அனுமதி வழங்கப்படும் என எவான் பபஜோர்ஜியோ அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு நாளைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பரிசீலனையைத் தொடர்ந்து உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக 347 மில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
இதன்மூலம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியின் பெறுமதி 2.04 பில்லியன் டொலராக உயர்வடையும்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட முக்கிய விடயங்களில் பெரும்பாலானவற்றை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் உள்வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














