உலகில் நடைபெறும் வெற்றிகரமான கிரிக்கெட் லீக்குகளில் முதன்மையானதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மாறியுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு 19ஆவது பருவகாலத் தொடராக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது.
இதனையொட்டி சமீபத்தில் ஐபிஎல் அணிகள் தாங்கள் விடுவித்த மற்றும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து மினி ஏலம் இன்றைய தினம் அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் சுமார் 64 கோடி வரையில் கையிருப்பு தொகை வைத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உலகின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவரான அவுஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் இந்திய ரூபாய் கொடுத்து வாங்கியது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மூன்றாவது வீரராக கேமரூன் கிரீன் மாற்றம்பெற்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கேமரூன் கிரீனுக்காக கடுமையான ஏலத்தில் போட்டியிட்டன ஆனால் நடிகர் ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா அணி அவரை இந்திய ருபாய் 25.20 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இலங்கை வீரர்களை பொறுத்த வரையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் மதீஷ பத்திரண அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.
2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண 18 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்ப்பட்டார்
மற்றுமொரு இலங்கை வீரரான வனிந்து ஹசரங்க 2 கோடி ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.
வெங்கடேஷ் ஐயர் 7 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லிர் 2 கோடி ரூபாவுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
இந்த மினி ஏலத்தில் எதிர்காலத்தை கருத்திக்கொண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களை அதிக விலைக்கொடுத்து ஏலத்தில் எடுத்தமை குறிப்பிடதக்கது.














