இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் கொடியதும் நீண்டதுமான உக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
202 இந்தியர்களில் 26 பேர் இறந்துவிட்டதாகவும், ஏழு பேர் காணாமல் போனதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாகேத் கோகலே மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே இந்திய வெளியுறவுத்துறையின் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் 119 பேர் முன்கூட்டியே ரஷ்யப் படைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேரை முன்கூட்டியே விடுவிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் உறுதிபடுத்தினார்.
ரஷ்யா-உக்ரேன் போர் பகுதியில் உயிரிழந்த இரண்டு இந்தியர்களின் உடல்கள் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர ஈர்க்கப்பட்டு போர் முனைகளுக்கு அனுப்பப்படுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யா-உக்ரேன் மோதலில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு செப்டம்பர் மாதம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தது.
ஜனவரி மாதம் ரஷ்யா-உக்ரேன் போரில் குறைந்தது 12 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் காணாமல் போனதாகவும் மையம் கூறியது.
2024 ஆகஸ்ட்டில் உக்ரேன் போரின் போது ரஷ்ய ஆயுதப் படைகளில் பணிபுரியும் எட்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும் அது கூறியது.

















