புளோரிடா பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய டான்பாஸ் பிராந்தியத்தின் தலைவிதி தீர்க்கப்படாத ஒரு முக்கிய பிரச்சினையாகவே உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டில் சந்தித்த பின்னர், இரு தலைவர்களும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகவும் சர்ச்சைக்குரிய இரண்டு விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
(உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் ரஷ்யா கைப்பற்ற முயன்ற கிழக்கு உக்ரேனின் டான்பாஸ் பகுதியைப் பிரித்தல்)
இதன்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுமா என்பது சில வாரங்களில் தெளிவாகத் தெரியும் என்று ட்ரம்ப் கூறினார்.
எனினும், இரு தலைவர்களும் அது தொடர்பான மேலதிக விவரங்களையோ, ஒரு சமாதான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடுவையோ செய்தியாளர் சந்திப்பின் போது வழங்கவில்லை.
மார்-எ-லாகோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடான போரில் 20 அம்ச அமைதித் திட்டத்தில் “90%” குறித்து ஒரு உடன்பாட்டிற்கு வந்ததாகக் கூறினார்.
அதே நேரத்தில் உக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் 95 சதவீதத்துக்கு முடிந்துவிட்டது என்று ட்ரம்ப் கூறினார்.
உக்ரேனில் ரஷ்யாவின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பிரச்சினைகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க மற்றும் உக்ரேன் குழுக்கள் அடுத்த வாரம் சந்திக்கும் என்று ஜெலென்ஸ்கி பின்னர் கூறினார்.
ரஷ்யா 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.
மேலும் மொஸ்கோ தற்போது உக்ரேனிய பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளது.
ரஷ்யா பெரும்பாலும் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனில் உள்ள டான்பாஸ் பகுதியை இராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றுவதற்கான திட்டம் தீர்க்கப்படாமல் உள்ளது என்று ட்ரம்ப் கூறினார்.
மொஸ்கோ தற்போது டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 75% மற்றும் அண்டை நாடான லுஹான்ஸ்கில் சுமார் 99% ஐக் கட்டுப்படுத்துகிறது.
இந்தப் பகுதிகள் கூட்டாக டான்பாஸ் என்று அழைக்கப்படுகின்றன.















