அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவிற்கு மஹர சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பாக ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், கடந்த 2001ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ள 20 துப்பாக்கிகள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தினாரல் ரி-56 ரக துப்பாக்கிகள் பதினைந்தும் 9 மில்லிமீட்டர் ரக 05 துப்பாக்கிகளும் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 1500 இற்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 100-இற்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 03 நாட்கள் தடுப்புக்காவலின் கீழ் வைத்து விசாரணை செய்வதற்கு கடந்த 27ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2001ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் கைத்துப்பாக்கி 2019ஆம் ஆண்டு வெலிவேரியவில் கால்வாய்க்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த இடத்தில் இருந்து துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையின் பின்னரே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.
தற்போது 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே பாதுகாப்பு வழங்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி வலியுறுத்தியுள்ளது.

















