தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல்நலகுறைபாடு காரணமாக தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்
கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த ‘மாகந்துரே மதூஷிடம்’ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.
இந்த துப்பாக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராணுவத்தினரால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்தது
குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
மேலும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டிருந்தது
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை டக்ளஸ் தேவானந்தா கடந்த 28 ஆம் திகதி கம்பஹா மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 2026 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
எனினும் அவர் தற்போது உடல்நலகுறைபாடு காரணமாகமஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

















