மன்னார் நகர சபை பிரிவில் நத்தார்,புதுவருட பண்டிகைகளுக்கான வியாபார நடவடிக்கைகளின் இறுதி நாளான இன்றைய தினம் (31) சூடுபிடித்துள்ள நிலையில்,ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் நகர பகுதிக்கு வருகை தந்து ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
நத்தார்,புதுவருட பண்டிகையையொட்டி மன்னார் நகர சபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள கேள்வி கோரல் மூலம் இடம் ஒதுக்கப்பட்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டு வருகின்றமை வழமை.
இந்த நிலையில் இம்முறை உள்ளூர் மற்றும் தென் பகுதி வர்த்தகர்கள் இடங்களை பெற்று பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம் (31) இறுதி நாள் என்பதுடன் நாளைய தினம் (1) புத்தாண்டு பண்டிகைகளைக் கொண்டாடும் வகையிலும் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள மன்னார் நகர பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள போதும்,பொலிஸார் விசேட நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இம்முறை மன்னார் நகரசபைக்கு பண்டிகைக்கால வியாபார நிலையங்களுக்கு இது ஒதுக்கீட்டால் 4 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.















