இங்கிலாந்தின் (Warwickshire.) வார்க்ஷயர் பகுதியில் (Eternal Wall Of Answered Prayer) தி எடர்னல் வால் ஆஃப் ஆன்சர்டு பிரேயர் என்ற பெயரில் சுமார் ஒரு மில்லியன் செங்கற்களைக் கொண்டு பிரம்மாண்டமான கிருஸ்துவ நினைவுச்சின்னம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் பிரார்த்தனைகள் நிறைவேறிய நிஜ மனிதர்களின் நம்பிக்கையூட்டும் கதைகளை உலகிற்குப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நினைவுச்சின்னத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் ஒரு தனித்துவமான கதையைத் தாங்கி நிற்கும் என்றும், மக்கள் தங்கள் திறன்பேசிகள் மூலம் அந்த அதிசய அனுபவங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீசெஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பின் முன்னாள் மதகுருவான ரிச்சர்ட் காம்பிள் என்பவரால் இந்த 40 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடவுள் இன்றும் மக்களின் வேண்டுதல்களுக்குச் செவிசாய்க்கிறார் என்பதை நிரூபிக்கவும், இக்கட்டான சூழலில் இருப்பவர்களுக்கு மனவலிமையை வழங்கவும் இந்த தளம் ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 12 பேருந்துகளின் உயரத்திற்கு அமையவுள்ள இந்த வெள்ளை நிற கான்கிரீட் அமைப்பு, அந்நாட்டின் மிகப்பெரிய மதச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் எனவும் அதனை ஒரு நாளைக்கு 800,000 பேர் பார்வையிடுவார்கள் என்றும் கருதப்படுகிறது.



















