நாட்டில் ஊழியர் சேமலாப நிதி பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்த நடவடிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஊழியர்கள் தற்போது தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யமுடியும் என்றும் தொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய தொடர்பு விபரங்களை வழங்கும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் அனுப்பப்படுவதுடன், பின்னர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை மீட்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என தொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பின்னரும் நிறுவனங்கள் நிதி செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதத்துடன் கூடிய நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை 22,450 நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்துவதில் தவறிழைத்துள்ளதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இவற்றின் மொத்த நிலுவைத் தொகை சுமார் 3,498 கோடி ரூபா என்றும் தொழில் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

















