லடாக்கில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, லே விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, லேயில் -9.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 0.6 சென்டி மீட்டர் பனிப்பொழிவு நிலவியுள்ளது.
இதனால், லேயில் உள்ள சுற்றுலாப் பகுதிகள் வெள்ளைப்போர்வையால் மூடப்பட்டது போல காட்சியளிக்கின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக லே விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, லேவில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, விமானச்சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன எனவும் இதனால், காத்திருப்பு நேரம் அதிகரிக்கலாம் எனவும் இது குறித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளது.
வானிலையை இயல்புநிலை திரும்பியவுடன் மீண்டும், சேவைகள் தொடரும் எனவும் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக, பயணிகள் தங்கள் விமானங்களின் நிலைகளை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளுமாறும் இண்டிகோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

















