தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (06) உறுதி செய்தது.
நீதிபதிகளான ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 ஆவது நாளாக விசாரித்தது.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிபதிகள் உத்தரவில்,
அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல.
மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது.
தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது – என்று தெரிவித்தனர்.



















