சிவனொளிபாத மலை – ஹட்டன் வீதியில் மண்சரிவுக்குள்ளான மகாகிரிதம்ப பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர், சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மகாகிரிதம்ப பகுதியில் மண்சரிவு அபாயம் நீங்கியுள்ளதாகவும், யாத்ரீகர்கள் பாதுகாப்பாக அந்தப் வீதியை பயன்படுத்திசிவனொளிபாத மலை தரிசனத்திற்குச் செல்ல முடியும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், சிவனொளிபாத மலையின் பொறுப்பதிகாரி வணக்கத்திற்குரிய தொரப்பனே சுமனஜோதி தேரரிடம் நேரில் அறிவித்துள்ளனர்.
டித்வா புயல் காரணமாக மகாகிரிதம்ப பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அங்கு மண்சரிவு அபாயம் இருப்பதாக முன்னர் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த அபாயத்தைத் தணிப்பதற்காக வழங்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை இராணுவத்தினர் துரிதமாகச் செயற்படுத்தியிருந்தனர்.
தற்போது குறித்த இடத்தில் கொங்கிரீட் பாதுகாப்புச் சுவர்கள் மற்றும் புதிய பாதுகாப்பு கைப்பிடிகள் பொருத்தப்பட்டு முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த இடத்திற்கு மீண்டும் விஜயம் செய்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், தற்போதைய நிலையை ஆராய்ந்த பின்னரே இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
















