ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களின் சார்பாக தலையிடுவதாக மீண்டும் மிரட்டல் விடுத்தால், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தெஹ்ரான் அச்சுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஈரானில் ஏற்பட்ட அமைதியின்மை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களின்படி தெஹ்ரானில் தொடரும் இரண்டு வார அமைதியின்மையினால் 490 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளாகவும், 48 பாதுகாப்பு பணியாளர்கள் பலியாகியுள்ளதாகவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உரிமைகள் குழுவான HRANA குறிப்பிட்டுள்ளது.
அதேநரேம் வன்முறைச் சம்பவங்களுக்காக 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
எனினும் இறப்பு எண்ணிக்கை தொடர்பில் ஈரான் இதுவரை அதிகாரிப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
இதனிடையே, இஸ்லாமியக் குடியரசு நாடான ஈரான் 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது பலவந்தம் பயன்படுத்தப்பட்டால் தலையிடுவதாக டெனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் குறித்து விவாதிக்க ட்ரம்ப் திங்கள் மூத்த ஆலோசகர்களை சந்திக்க உள்ளார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஈரானிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக ட்ரம்ப் கூறினார்.
மேலும், ஈரான் தலைவர்கள் சனிக்கிழமை தன்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அவர்களுடன் பேசக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், அது தொடர்பான மேலதிக விவரங்களை அவர் வழங்கவில்லை.
இந்த நிலையில், தெஹ்ரான் மீதான வொஷிங்டனின் இந்த தலையீட்டிற்கு எதிராக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாக்கர் கலிபாஃப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் நடந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் (இஸ்ரேல்) மற்றும் அனைத்து அமெரிக்க தளங்கள் மற்றும் கப்பல்களும் எங்களின் அதிகாரப்பூர்வ இலக்காக இருக்கும் என்று ஈரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதி கலிபாஃப் கூறினார்.












