இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்தமைக்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சகாயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்
ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதில் இருந்த பத்து மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து காரைநகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்த நிகழ்வு மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த புயல் காரணமாக கடந்த ஒரு வார காலமாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன் பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் புயல் கரையை கடந்ததையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று 400க்கும் மேற்பட்ட விசைப்பல்களில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் தென்னரசு என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகையும், அதில் இருந்த பரலோகராஜ், சுமித், கனகராஜ், சுதன், டோக்கியோ உட்பட பத்து மீனவர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு மீனவர்களை படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை மற்றும் டிட்வா புயல் காரணமாக கடந்த மாதம் மிகவும் குறைந்த நாட்கள் மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று நிலையில் மீண்டும் இலங்கைக்கு அருகே உருவாகிய புயல் காரணமாக கடந்த ஒரு வாரம் மீன்பிடிக்க செல்லாத நிலையில் வயிற்று பிழைப்புக்காக நேற்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்















