சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து ஏற்பாடு செய்த “பிரதேச கலை இலக்கிய விழா – 2025” நிகழ்வு நேற்று சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம, சம்மாந்துறை பிரதேச செயலக அதிகாரிகள், பல்துறை சார்ந்த கலைஞர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில், மறைந்த கலைவேள் கலாபூஷணம் மாறன் யூ செயின் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவரங்கம் இடம்பெற்று, அவருடைய கலைப் பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதேசக் கலைஞர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
சம்மாந்துறை பிரதேசத்தின் கலை மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக தொடர்ந்து ஆற்றிவரும் அரிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்களுக்கு கலாசார அதிகார சபையினால் சிறப்புப் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு உயரிய “சுவதம்” விருதுகள் பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. அதேபோல், பிரதேச மட்டத்தில் நடத்தப்பட்ட கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம மற்றும் சிறப்பு அதிதிகள் தமது உரைகளில், பிரதேசத்தின் கலை மற்றும் கலாசார விழுமியங்களை பாதுகாப்பதன் அவசியம், இளம் தலைமுறையினரை கலைத்துறைக்குள் ஊக்குவித்து வழிநடத்த வேண்டிய முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.
















