டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை.
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.
இதேவேளை, “தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை எனவும் கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும்.
வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது இவ்வாறான காரணங்களால் டிரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.












