“முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள்.ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..”
இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம் போன்ற வார்த்தைகளை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி விளங்காமல் கதைத்துவிட்டுப் போகிறார் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது அரசாங்கம் திட்டமிட்டு வடக்கில் தன் கவனத்தைக் குவிக்கிறது என்பதனை இது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்வதா?
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு மிகக்குறுகிய காலத்தில் அதிக தடவை விஜயம் செய்த ஒரே ஜனாதிபதி அனுரதான்.அப்படித்தான் அவருடைய அமைச்சர்களும். அரசாங்கம் வடக்கை நோக்கி தன்னுடைய முழுக் கவனத்தையும் குவிப்பதை இது காட்டுகிறது.
இது இயல்பானது அல்ல. ஒப்பிட்டுப் பார்த்தால் இதே அளவு கவனக்குவிப்பு கிழக்கில் இல்லை.வடக்கின் விவகாரங்களைக் கையாள்வதற்கு என்று அமைச்சர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பெரும்பாலான அமைச்சர்கள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள்.அமைச்சர்கள் அல்லது அரச பிரதானிகள் கலந்துகொள்ளும் அரச நிகழ்வுகள் அடிக்கடி வடக்கில் நடக்கின்றன.இவை யாவும் அரசாங்கம் வடக்கை நோக்கி அதன் கவனத்தைத் திட்டமிட்டுக் குவிக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன.
“பார்க்காத,பழகாத எங்களை நம்பினீர்கள்.உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் ஜனாதிபதி கூறிய வார்த்தைகள்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதனை அது காட்டுகிறது.அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,அடுத்த மாகாண சபையில் அந்த வெற்றியை மேலும் விஸ்தரிப்பதற்கும் திட்டமிட்டு அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் வடக்கின் மீது குவிக்கின்றது.
அண்மையில் உத்தியோகப்பற்றற்ற விதமாக கிராமமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி,தேசிய மக்கள் சக்திக்கு கிட்டத்தட்ட முப்பது விகிதமான வாக்கு வங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக கைபேசி செயலிகளின் கைதிகளாகக் காணப்படும் தலைமுறையினர் மத்தியில் அனுரவுக்கு அதிகம் ஆதரவு காணப்படுகிறது. அந்த ஆதரவைத் தக்கவைக்கும் விதத்தில் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியானது அனுரவை தொடர்ந்தும் தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் கதாநாயகராகக் கட்டியெழுப்பி வருகிறது.
தற்பொழுது அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் “பிரஜா சக்தி” என்ற கிராமமட்ட செயல்திட்டமும் அரசாங்கம் அதன் வாக்கு வங்கியை வளர்க்கும் நோக்கிலானது என்று சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக அண்மையில் சுமந்திரன் ஒரு காணொளியில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார். அரசாங்கம் அதன் அரச வளங்களை பயன்படுத்தி கிராம மட்டத்தில் பிரஜா சக்தி என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.ஆனால் அக்கட்டமைப்பு இறுதியிலும் இறுதியாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிக்கு சேவகம் செய்கின்ற,அந்தக் கட்சியின் ஆதரவுத் தளத்தைக் கட்டிஎழுப்புகின்ற ஒன்றுதான் என்று அண்மையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இது ஏறக்குறைய மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்,பசில் ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட அரச கட்டமைப்புகளைப் போன்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட ஏழு வெவ்வேறு அரசு அலுவலர்கள், அரச சேவை என்ற பெயரில் தாமரை மொட்டுக் கட்சிக்காக கிராம மட்டங்களில் வேலை செய்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அரச வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில், அரச காரியம் என்ற போர்வையில், அவர்கள் கட்சி வேலையைச் செய்தார்கள். கட்சியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தியும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டது என்று தமிழ்க் காட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அதாவது அரசாங்கம் வடக்கில் அதன் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு உழைக்கின்றது.இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டி வரலாம் என்று அவர்களுக்குத் தெரிகிறது.தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் அவர்கள் ஊகிக்கின்றார்கள்.
குறிப்பாக,உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இரண்டாக நிற்கின்றது.கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் பகிரங்கமாக ஒருவர் மற்றவரைத் தாக்கி விமர்சித்து வருகின்றன.அரசியலமைப்பு பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக எட்டு தடவைகள் வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மைகள் உண்டு. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒரு படைப்பிரதானியை நியமிக்க அரசாங்க முயற்சித்தபோது அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்பதும் உண்மை என்று தெரிகிறது. அதுதொடர்பாக அவர் பகிரங்கமாக தன்னிலை விளக்கம் எதையும் இதுவரை தரவில்லை.தனக்கு எதிராக எழுதும் ஊடகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரியவில்லை.
ஆனால் இந்த விடயத்தை குவிமயப்படுத்தி சிறீதரனை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் மதிப்பிறக்கம் செய்யும் வேலைகளை சுமந்திரன் அணி மிகவும் கச்சிதமாகச் செய்துவருகிறது.கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிறீதரன் செயற்படுகிறார் என்று சொன்னால் அதற்கு எதிராக கட்சி உரிய ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கலாம். அது கட்சி விவகாரம். அதனை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுதொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்களைக் கூட்டிப் பகிரங்கமாகக் கதைக்கவேண்டிய தேவை என்ன? கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்குள்ளேயே ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதைச் செய்யாமல் கட்சிக்கு வெளியே ஊடகங்கள் மத்தியில் அதைச்சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது?
ஏனென்றால், கட்சி ஒரு கட்டமைப்பாக பலமாக இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால், வெல்லலாம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது கட்சி உயர் மட்டத்தோடும் முரண்படாமல் விசுவாசத்தை வெளிக்காட்டாமல் தந்திரமாக நடந்து கொள்கிறார்கள்.வெல்லக்கூடிய குதிரை என்ற ஒரே ஒரு பலம்தான் இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உண்டு.ஆனால் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்தால், அது கட்சியைப் பாதிக்கும்.இப்போதுள்ள நிலைமைகளின்படி,சுமந்திரன் சிறீதரனை பெருமளவுக்கு கிளிநொச்சிக்குள்ளே முடக்கி விட்டார். ஆனால் கிளிநொச்சியில் சிறீரனின் இடத்தை நிரப்ப வேறு யாரும் கட்சிக்குள் இல்லை. அதுமட்டுமல்ல சிறுதரனை தோற்கடிக்கும் முயற்சியில் கட்சி மேலும் பலவீனமடையும் வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன.மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதில் தமிழரசுக் கட்சியின் வெற்றியின் பருமனை அது நிச்சயமாகப் பாதிக்கும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி இவ்வாறு தானே தனக்குள் பிடுங்குபடுவது, தனக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்புகளைத் திறந்து விட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது.அதனால்தான் தமது கிராமமட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதன் முலமும் வடக்கை குவிமயப்படுத்தித் திட்டமிட்டு உழைப்பதன் மூலமும் வடமாகாண சபையில் பலமான வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
வடக்கை வெற்றிகொண்டால் கிழக்கு தானாக விழுந்து விடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தமிழ்த் தேசிய கோரிக்கையின் தலை வடக்கில்தான் இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.எனவே தலையை நசுக்கி விட்டால், தமிழ்த் தேசியக் கோரிக்கை வலுவிழந்து விடும் என்றும் அவர்கள் நம்பக்கூடும். அந்த நோக்கத்தோடுதான் அவர்கள் வடக்கை குவிமயப்படுத்தி உழைக்கிறார்கள்.
இது சில தசாப்தங்களுக்கு முன்பு அதாவது 1980களின் தொடக்கத்தில் ஜெயவர்த்தன தமிழ்த் தேசியக் கோரிக்கையை தோற்கடிப்பதற்கு வகுத்த திட்டத்தின் மறுவளமான வியூகந்தான். தமிழ் மக்களின் தாயகத்தை துண்டித்து விட்டால் தமிழீழக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும் என்று ஜெயவர்த்தன நம்பினார்.அதற்கு கிழக்கை,திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் பலவீனப்படுத்துவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசங்களைத் திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் சிங்களபௌத்த மையப்படுத்துவது, அதன் மூலம் வடக்கைத் தனிமைப்படுத்துவது. கிழக்கை இழந்தால் அதாவது தாயகம் துண்டிக்கப்பட்டால், தாயகத்தின் ஒரு பகுதி வெற்றி கொள்ளப்பட்டு விட்டால், தாயகக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும்.அது இறுதியிலும் இறுதியாக தமிழ்த் தேசிய அரசியலையும் தோற்கடித்துவிடும். முதலாம் கட்ட ஈழப்போரில் இந்த வியூகத்தை வைத்துத்தான் ஜெயவர்த்தன படை நடவடிக்கைகளையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் முன்னெடுத்தார்.இந்த வியூகத்தில் கிழக்கை வெற்றிகொள்வதே முதல் இலக்காக இருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின் தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தை மறுவளமாகப் பயன்படுத்துகின்றது. வடக்கை வெற்றி கொண்டால் கிழக்குத் தானாக விழுந்துவிடும். தமிழ்த் தேசியக் கோரிக்கை பலமிழந்து விடும் என்று தேசிய மக்கள் சக்தி திட்டமிடுகின்றதா?அந்த அடிப்படையில்தான் வடக்கை நோக்கி ஜனாதிபதி அடிக்கடி வருகிறாரா? தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளை வடக்கின் கோரிக்கைகளாகச் சுருக்கிக் கூறுவதும் அதனால்தானா? இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருந்த வடக்குக்கிழக்கை,ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. இப்பொழுது கேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது,அந்த வியூகத்தின் இறுதிக்கட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கை நோக்கி உழைக்கின்றதா?
உட்கட்சிச் சண்டைகளை ஊடகங்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கும் தமிழரசுக் கட்சியும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த ஆபத்தை அதற்குரிய முழுப் பரிமாணத்தோடு விளங்கி வைத்திருக்கின்றனவா?













