இந்தியா இன்று (26) தனது 77 ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.
அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கவும், அதன் வளமான கலாச்சார மற்றும் இராணுவ பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டம் இடம்பெறுகிறது.
புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமை தாங்குவார்.
இந்த முக்கியமான நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆண்டு, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பயணத்தை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய போர் நினைவுச்சின்னம் வரை நீண்டிருக்கும் கர்தவ்ய பாதை, விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டங்கள் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகால பாரம்பரியம், நாட்டின் முன்னோடியில்லாத வளர்ச்சி முன்னேற்றம், வலுவான இராணுவ வலிமை, துடிப்பான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பு குடிமக்களின் தீவிர பங்கேற்பு ஆகியவற்றின் அசாதாரண கலவையைக் கொண்டிருக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கி சுமார் 90 நிமிடங்கள் நீடிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு வருகை தருவதோடு இது தொடங்கும்அங்கு அவர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.
அதன் பிறகு, பிரதமர் மற்றும் பிற பிரமுகர்கள் அணிவகுப்பைக் காண கர்தவ்ய பாதையில் உள்ள மரியாதை மேடைக்குச் செல்வார்கள்.
















