இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது.
இ.தொ.கா பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதித் தலைவர் அனுசியா சிவராஜா, போசகர் சிவராஜா, உபத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், காரியாலய உத்தியோகஸ்தர்கள் மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,
தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கு இ.தொ.கா ஒருபோதும் எதிரானது அல்ல எனத் தெரிவித்தார். யார் அரசாங்கத்திற்கு வந்தாலும், அவர்களின் நோக்கமும் செயற்பாடுகளும் மக்களுக்குச் சாதகமாக இருந்தால் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும், தவறுகள் இருந்தால் ஆலோசனைகளையே முன்வைப்போம் என்றும் கூறினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செயற்பட்ட அனுபவம் இ.தொ.காவிற்கு நீண்ட காலமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஒரு வருடமாக பாராளுமன்றத்திலும், கட்சியிலும், மக்கள் மத்திலும் தாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அனைவரும் அறிவார்கள் என்றார். அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ விமர்சிக்காமல், ஆலோசனைகளையே முன்வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் மலையகத்திற்காக 4,500 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், நடைமுறையில் எந்த புதிய திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய ஜீவன் தொண்டமான், தற்போது 7,000 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்படுவதும், தாம் ஆட்சியில் இருந்தபோது ஆரம்பித்த வீடுகளையே இவ்வருடம் மக்களிடம் கையளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு தாம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் காணி உரிமைக்காக 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதைக் கேள்வியெழுப்பிய அவர், இன்று தற்காலிக தீர்வான சம்பள உயர்விற்காக அதே நிதி பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இதனை எடுத்துச் சொன்னால் இ.தொ.கா சம்பள உயர்விற்கு எதிரானது என தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் கூறினார்.

2020 ஆம் ஆண்டு 750 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், 2024 ஆம் ஆண்டு 1,000 ரூபாவிலிருந்து 1,350 ரூபாவாகவும் அடிப்படை சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது இ.தொ.காவே என அவர் நினைவூட்டினார். அன்று 2,138 ரூபா சம்பளம் வேண்டும் எனக் கூறியவர்கள், இன்று 1,750 ரூபாவை வெற்றியாகக் கூறுவது தொழிலாளர்களுக்கான துரோகம் எனவும் அவர் விமர்சித்தார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பிற்காக,
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தேன் என்பதனை தெரிவிக்கின்றேன்.
“நான் அல்ல, நாம்” என்ற சிந்தனை உருவானால்தான் மலையக சமூகம் முன்னேறும் எனக் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், தோட்டத்தில் வேலை செய்தால் மட்டுமல்ல, தோட்டத்தில் பிறந்தாலே வீடு என்ற புதிய சட்டத்தை நான் அமைச்சராக இருந்தப்போது கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த சட்டம் மீண்டும் பழைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறித்து கவலை தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் மலையகம் தொடர்பான முழுமையான தகவல்கள் சரியாக கொண்டு செல்லப்படவில்லை என்பதே பிரச்சினையின் மூலக் காரணம் எனத் தெரிவித்த அவர், டித்வா புயலுக்குப் பின்னரான நிவாரண நடவடிக்கைகளையும் அதற்கான உதாரணமாக எடுத்துக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், ஆளும் கட்சி மலையக பிரதிகள் அரசாங்கத்திற்குள் தலையாட்டி பொம்மைகளாக மட்டுமே உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தோட்டங்களில் தொழிலாளர்களின் வேலைக்கு தடையாக இருப்பது அரசாங்கமோ, அரசியல்வாதியோ, தொழிற்சங்கமோ அல்ல; பெருந்தோட்ட நிறுவனங்களே எனக் கூறிய ஜீவன் தொண்டமான், மலையக மக்களிடையே பிரிவினையை உருவாக்கியதும் அந்த நிறுவனங்களே என வலியுறுத்தினார். இனி பிரிவினைகளை தள்ளி வைத்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்; ஒற்றுமையே எமது பலம் என அவர் தெரிவித்தார்.















