இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியானது 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி புரூக் மற்றும் அனுபவமிக்க வீரரான ஜோ ரூட்டின் ஆகியோரின் ஆட்டமிழக்காத சதங்கள் என்பவன அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை மண்ணில் இங்கிலாந்து 3:1 என்ற கணக்கில் வென்றது.
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி, அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 357 ஓட்டங்களை குவித்தனர்.
இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித் தலைவர் ஹாரி புரூக் 66 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களை எடுத்தார்.
2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் 128 ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி கொக்கை முந்தி, இலங்கை மண்ணில் ஆசியரல்லாத ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை இதன் மூலம் புரூக் படைத்தார்.
ஜோ ரூட் 108 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை எடுத்தார்.
தனது அற்புதமான சதத்துடன், ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் எட்டாவது அதிக ஓட்டங்கள் எடுத்த வீரரானார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவை முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் நேற்று முந்தினார்.
35 வயதான ரூட் மொத்தமாக 384 போட்டிகளிலும் 506 இன்னிங்ஸ்களிலும் 49.69 சராசரியுடன் 22,413 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த இந்த வீரர் 61 சதங்களையும் 116 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
இங்கிலாந்து அணி 350 ஓட்டங்களை கடந்தபோது, நான்காவது விக்கெட்டுக்கு ரூட் மற்றும் புரூக் 113 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 191 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை தரப்பில் தனஞ்சய டி சில்வா (1/45), வனிந்து ஹசரங்க (1/76), ஜெப்ரி வான்டர்சே (1/76) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
358 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கையின் தொடக்க வீரர் பத்தும் நிஸ்ஸங்க 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை எடுத்தார்.
கமில் மிஷாரா (22), விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் (20), ஜனித் லியனகே (22), துனித் வெல்லலகே (22) ஆகியோர் சொப்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தங்கள் துடுப்பாட்டத்தை அணிக்கு உதவும் வகையில் மாற்றத் தவறினர்.
எனினும், தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்த பவன் ரத்நாயக்க, 115 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 121 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியாக இலங்கை 46.4 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணிக்காக, ஜேமி ஓவர்டன் (2/48), சாம் கரன் (1/44), லியாம் டாசன் (2/48), வில் ஜாக்ஸ் (2/43), மற்றும் அடில் ரஷித் (2/61) ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஹாரி புரூக்கும், தொடர் நாயகன் விருதை ஜோ ரூட்டும் வென்றனர்.















