சுழிபுரம் – காட்டுப்புலத்தில் ஏற்கனவே பிரஜா சக்தி அமைப்புக்கு மக்கள் தெரிவு செய்தர்களை நீக்கிவிட்டு தேசிய மக்கள் சக்தியினர் புதிய ஒருவரை தெரிவு செய்ததாக சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
வலி. மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் இன்றையதினம் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கருத்து தெரிவிக்கும்போது முழுமையாக கருத்து தெரிவிக்க அனுமதிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தாராஜா “இது குறித்து எழுத்து மூலமாக தாருங்கள், அது குறித்து பரிசீலிக்கின்றோம்” என்றார்.
குறித்த சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி மேலும் தெரியவருகையில்,
இவ்வாறு மாற்றம் செய்யுமாறு நீங்களே (பவானந்தராஜா எம்.பி) கூறியதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எங்களது பிரச்சினைகளை கூறினால் தீர்ப்பதாக தான் ஆரம்பத்தில் கூறினீர்கள். அதனால் தான் இங்கே கூறுகின்றோம்.
காட்டுப் புலத்தில் மூன்றுபேர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை நீக்கி விட்டு புதிதாக மூவரை தெரிவு செய்துள்ளீர்கள்.
மக்கள் பிரச்சனைகளும், கிராமத்தில் உள்ள பிரச்சனைகளும் தெரியாதவர்களை நியமித்துள்ளீர்கள். இவ்வாறு இருக்கையில் அவர்கள் எவ்வாறு மக்களின் பிரச்சனைகளை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்? இதற்கான தீர்வு வழங்க வேண்டும் என்றார்.
இது குறித்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
இது நாடளாவிய ரீதியில் உள்ள பிரச்சினை. இதனை ஒரு கடிதம் மூலமாக எமக்கு தெரியப்படுத்துங்கள் நாசா நடவடிக்கை எடுக்கின்றோம்.
இது ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கை. எனவே மக்களிடம் இருந்து முன்வைக்கப்படுகின்ற குறைபாடுகளை அடுத்து வரவிருக்கின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைத்து சரியான நடவடிக்கை எடுப்போம் என்றார்.


















